தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தை அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் நோக்கி அவர்களின் விடுதலைக்கான நியாயமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
காலங்காலமாக தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களை முன்னெடுப்பதும் அவர்களுக்கு வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் வாடிக்கையாகியுள்ள நிலையில் இது தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுத்துவரும் உண்ணவிரதப் போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார், நாட்டில் யுத்தம் முடிந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன,ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலை மீள்குடியேற்றம் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்விதமான தீர்க்கமான தீர்வுகளும் வழங்கப்படவில்லை,
ஏற்கனவே நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் அனைத்து சமூகங்களும் புரிந்துணர்வுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவது வரவேற்கத்தக்கது என்ற போதிலும் தமிழ் அரசியல் கைதிகளுக்கான விடுதலையை மனிதாபிமான ரீதியில் அரசாங்கம் வழங்க முன்வரும் பட்சத்தில் அது அரசாங்கத்தின் பாரிய நல்லிணக்க சமிஞ்சையாக சிறுபான்மை சமூகம் சர்வதேச சமூகத்தால் பார்க்கப்படும் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமது பிள்ளையை பிரிந்து ,தந்தையைப் பிரிந்து,கணவனை பிரிந்து மற்றும் சகோதரரைப் பிரிந்து உறவுகள் படும் வேதனை மனிதாபிமான ரீதியில் நோக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கத்தின் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்துக்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் மனோ கணேசன் போன்றோர் அரசாங்கத்துக்கு வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.