குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசமைப்பின் ஊடாக ஜனாதிபதியிடமிருக்கும் மாகாண சபைகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை பறித்து வடமாகாண சபையை தமிழ் ஈழமாக மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநரே காணப்படுவார் எனவும் மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் எதனையும் ஆளுநரின் கையொப்பத்தின் ஊடாகவே சட்டமாக மாற்றவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் உத்தேச புதிய அரசமைப்பில் மாகாண அமைச்சரவையின் யோசனைப்படி ஆளுநரை தெரிவுசெய்யும் நடவடிக்கையே இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். அன்று இந்தியாவின் அழுத்தத்தின் கீழ் ஜேஆர் மாகாணசபைகள் என்ற பட்டத்தை பறக்கவிட்டார் எனவும் ஆனால் நூல் அவரிடமேயிருந்தது எனவும் தெரிவித்த உதய கம்மன்பில ஆனால் அவரின் மருமகனான தற்போதைய பிரதமரோ அந்த நூலை வெட்டிவிட்டு அந்த பட்டத்தை சுதந்திரமாக பறக்க அனுமதியளித்துள்ளார் என் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ் ஈழமாக வடமாகாணசபையை மாற்றியமைப்பதற்கான வாய்ப்பை தற்போதைய பிரதமர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் எனவும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.