241
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவின் அழிவுகளை தடுக்கும் பிரிவை சேர்ந்தவர்கள் என தொலைபேசி ஊடாக தம்மை அறிமுகப்படுத்தியவர்கள் , பௌத்த மதகுரு ஒருவர் எனக்கு எதிராக முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாகவும் , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டி உள்ளதால் என்னை கொழும்பில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அதற்கு நான் எனது உடல் நிலை மோசமாக உள்ளமையினாலும் , கொழும்பு வருவதற்கான வசதிகள் இல்லாமல் இருப்பதாலும் கொழும்புக்கு விசாரணைக்கு வர முடியாது. நீங்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலையோ , வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திலையோ அல்லது யாழ்ப்பணத்தில் வேறு எங்காவது விசாரணைக்கு அழைத்தால் வர முடியும் என கூறினேன்.
அது தொடர்பில் தாம் பின்னர் கூறுவதாக கூறி அழைப்பை துண்டித்துக்கொண்டார்கள் என தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் உறவினர்கள் – ஜனாதிபதி சந்திப்புக்கு ஏற்பாடு.
அதேவேளை அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஜனாதிபதியை சந்திக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தருவதாக வடமாகாண ஆளுனர் உறுதி அளித்துள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுனரை சந்தித்து , ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருமாறு கோரி இருந்தோம். அவர் அதற்கு தான் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருந்தார்.
அவ்வாறு ஏற்பாடு செய்து தரப்படின் அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் கொழும்பு சென்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுப்போம். என தெரிவித்தார்.
சுபீட்சமான எதிர்காலத்திற்கு பிரார்த்தியுங்கள்.
தமிழ் மக்களுக்கு சபீட்சமான எதிர்காலம் அமைய வேண்டும் என இந்த தீபாவளி தினத்தில் இறைவனை வேண்டுமாறு வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்து மக்களினால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அந்நாளில் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்பட வேண்டும் , மீள்குடியேற்றம் பூரணப்படுத்த வேண்டும், காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாக வேண்டும் , தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து , அவர்கள் சுபீட்சமான வாழ்வை வாழ வேண்டும் என இறைவனை பிரார்த்திக்குமாறு கேட்டுகொண்டார்.
Spread the love