குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் தமது போராட்டத்தினை தற்காலிகமாக கைவிட்டு உள்ளனர். அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் , சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்க கோரியும் யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி (நாளை மறுதினம்) யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற உள்ளது.
குறித்த சந்திப்பில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தாம் அழுத்தமாக பேசி தீர்வினை பெற்றுக்கொள்ள போராடுவோம். எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி செவி சாய்க்காத நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பல்கலை கழக மாணவர்களை ஒன்று திரட்டி தீர்வு கிடைக்கும் வரையில் போராடுவோம். அதுவரையில் இன்றைய போராட்டத்தை சற்று தளர்த்தி இன்றைய போராட்டத்தினை அடையாள உண்ணாவிரத போராட்டமாக மாற்றி இன்றுடன் போராட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு மாணவர் ஒன்றியம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கோரியதை அடுத்து மாணவர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக இன்று மாலை 4 மணியுடன் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தனர்.