குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதன் பின்னரான இரண்டரை ஆண்டு காலத்தில் 2773 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டு இறுதியில் மொத்த தேசிய உற்பத்தியில் 71 வீதம் மொத்த படுகடனாக காணப்பட்டதாகவும், 2017ம் ஆண்டில் இந்த தொகை 85 வீதமாக உயர்வடைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2006ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அப்போதைய அரசாங்கம் 5169 பில்லியன் ரூபா கடன் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இந்த அரசாங்கம் இரண்டரை ஆண்டுகளில் 2773 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுக் கொண்ட போதிலும், நாட்டில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் உட்கட்டுமான வசதிகள் பாரியளவில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.