190
அனுராதபுரம் அரசியல் கைதிகளின் அடுத்த கட்டம் சிக்கல்கள் நிறைந்த ஒரு விடயமாகியிருக்கின்றது. இந்த சிக்கல்களில் இருந்து விடுபட்டு, எவ்வாறு அவர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. இந்தப் பிரச்சினைக்கு யார் தீர்வு காணப் போகின்றார்கள்? யாரிடம் இருந்து தீர்வைப் பெறுவது என்பது போன்ற கேள்விகள் இப்போது எழுந்திருக்கின்றன.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இராசதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளும், எட்டு வருடங்களாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு எதிரான வழக்குகள் கடந்த நான்கு வருடங்களான வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த வழக்குகளின் விசாரணைகள் முற்றுப்பெறவில்லை.
நான்கு வருடங்களாக விசாரணை செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட சாட்சிகளுக்கு உயிரச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக நீதிமன்றத்தின் ஊடாக சட்டமா அதிபருடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, இந்த வழக்குகளை அனுராதரபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு அமைவாகவே இந்த வழக்குகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
மாவட்ட நீதிமன்றங்கள் அல்லது நீதவான் நீதிமன்றங்கள் குறுகியதோர்; இடப்பரப்பையே தமது நியாயாதிக்க எல்லைகளாகக் கொண்டிருக்கின்றன. ஆனால் மேல் நீதிமன்றத்தைப் பொறுத்தளவில் அத்தகைய வரையறுக்கப்பட்ட நியாயாதிக்க எல்லைப்பரப்பு கிடையாது.
சர்வாதிகாரமா………….
மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்படுகின்ற ஒரு வழக்கு தொடர்பான சம்பவம் நடைபெற்ற பிரதேசத்தில் உள்ள மேல் நீதிமன்றத்தில்தான் அந்த வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. காரண காரியங்களுக்காக வடக்கில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை நாட்டின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் உள்ள ஒரு மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்யுமாறு பணிப்புரை விடுப்பதற்கு சட்;டமா அதிபருக்கு நீதித்துறை சட்டவிதிகள் அதிகாரமளித்திருக்கின்றன.
அதேபோன்று நாட்டின் கிழக்கு மாகாணத்திலோ அல்லது தென் மாகாணத்திலோ ஏதாவது ஓரிடத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் தொடர்பான மேல் நீதிமன்ற வழக்கு விசாரணையை வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என ஏதாவது ஒரு திசையில் உள்ள ஒரு மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய முடியும். அதனைத் தீர்மானிப்பதற்குரிய அதிகாரங்களை சட்டமா அதிபர் கொண்டிருக்கின்றார்.
இந்த சட்டரீதியான அதிகாரத்தைப் பயன்படுத்தியே வவுனியாவில் நடைபெற்று வந்த மூன்று அரசியல் கைதிகளின் வழக்குளையும் சட்டமா அதிபர் அனுராதபுரத்திற்கு மாற்றியிருக்கின்றார். உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த நடவடிக்கையை அவர் எடுத்திருக்கின்றார்.
எனவே, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை சரியானதொரு நடவடிக்கையாகவே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைமை இருந்தாலும்கூட, சட்டமா அதிபர் இந்த விடயத்தில் ஒரு சர்வாதிகார போக்கிலேயே நடந்து கொண்டிருக்கின்றார் என்பது சட்டத்துறை நிபுணர்களின் கருத்தாகும்.
ஏனெனில் சாட்சிகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்கின்ற அதேவேளை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களாகிய எதிரிகளின் நலன்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என்பதும் நீதித்துறையின் சட்டவிதியாகும். சாட்சிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எதிரிகளின் நலன்களைப் பாதிப்பதற்கு இடமளிக்கப்படக் கூடாது. ஒன்றுக்கொன்று முரண்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம். இது சட்டமா அதிபரின் தவிர்க்க முடியாத பொறுப்பாகும். அனுராதபுரம் அரசியல் கைதிகளின் விடயத்தில் சட்டமா அதிபர் இந்தப் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றவில்லை என்பதே அனுபவம் மிக்க சட்டத்தரணிகளின் குற்றச்சாட்டாகும்.
அரசியல் சார்ந்த விடயம்
அனுராதபுரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற கைதிகள் மூவரும், இராணுவத்தினரைக் கொலை செய்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்னர் பல மாதங்களாகவே அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பரவலாக வன்னிப்பிரதேசத்தில் யுத்த மோதல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மோதல்கள் மிகத் தீவிரமாக இடம்பெற்றிருந்தன. தீவிரமான ஒரு யுத்த காலமாகிய 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலைப்புலி போராளிகளான இந்தக் கைதிகள் மூவரும் இராணுவத்தினரைக் கொலை செய்தார்கள் என்பதே குற்றச்சாட்டு.
அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இந்த யுத்தத்தில் இந்த இருதரப்பினருமே எதிரிகளாவார். எதிரிகள் ஒருவரை ஒருவர் வெற்றி கொள்வதற்காகத் தாக்கி அழிப்பதற்காக மேற்கொள்வதே யுத்தமாகும். இத்தகையதொரு சூழலில் இராணுவத்தினரைக் கொலை செய்தார்கள் என்று யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலி உறுப்பினர்களான இந்த மூன்று அரசியல் கைதிகளின் மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இதில் இரண்டு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாதாரண சூழலில் கொலை செய்யவில்லை. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.
இந்த நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினை காரணமாகவே இங்கு முப்பது வருடங்களாக ஒரு யுத்தம் நீடித்திருந்தது. அந்த வகையில் இது ஓர் அரசியல் பிரச்சினை சார்ந்த விடயமாகும். வெறுமனே, சாதாரண குற்றவியல் சார்ந்த ஒரு விடயமல்ல. இதனாலேயே, அரசியல் காரணங்களுக்காக விசேடமாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இவர்கள் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு, அந்த சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. எனவே, இது ஓர் அரசியல் சார்ந்த வழக்கு என்ற நிலையிலும் அணுகப்பட்டிருக்க வேண்டும்.
அரசியல் சார்ந்த விடயங்களுக்காகவே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போது நீர்த்துப் போய்விட்டது என்று சர்வதேசத்திடம் அரசாங்கம் கூறினாலும்கூட, அந்தச் சட்டத்தை உறங்கு நிலையில் வைத்துக் கொண்டு தமக்கு வேண்டிய நேரங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் அதனைப் பயன்படுத்தி தமிழர்களைக் கைது செய்கின்ற போக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில்தான் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறைச்சாகைளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்களை, அரசியல் கைதிகள் என ஏற்க மறுத்து, அவர்களை அரசாங்கம் பயங்கரவாதிகள் என வலிந்து கூறி வருகின்றது.
அடிப்படை மனித உரிமை மீறல்
இந்த மூன்று அரசியல் கைதிகளினதும் விடயத்தில் சாட்சிகளின் பாதுகாப்புக்காக, இவர்களுடைய வழக்குகளை அனுராதபுரத்திற்கு மாற்றும்போது, எதிரிகளின் அடிப்படை உரிமை சார்ந்த நலன்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. வழக்கு விசாரணைகளின்போது, சாட்சிகளின் பாதகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது முக்கியம். அதேவேளை எதிரிகளின் அடிப்படை உரிமை பேணப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தபட்டிருக்கின்றது, இந்த வகையில் சாட்சிகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அவர்களுடைய நலன்களைப் பேணுகின்ற அடிப்படை உரிமையும் முறையாகப் பேணப்பட வேண்டிய பொறுப்பு சட்டமா அதிபரைச் சார்ந்திருக்கின்றது. அந்த பொறுப்பு முறையாக நிறைவேற்றப்படவில்லை. இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.
இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தமிழர்கள். சிங்கள மொழி தெரியாதவர்கள். இவர்களுடைய வழக்குகள் சிங்களத்தை அரசகரும மொழியாக முழுமையாகப் பயன்படுத்துகின்ற அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
அனுராதபுரத்திற்கு இந்த வழக்குகள் மாற்றப்படுவதை இந்தக் கைதிகள் மூவரும் ஆரம்பத்திலேயே ஆட்சேபித்திருந்தார்கள். அது மட்டுமல்ல. இந்த வழக்குகள் ஏற்கனவே நடைபெற்று வந்ததைப் போன்று வவுனியாவிலேயே நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றார்கள். புதிதாக வேறிடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதல்ல அவர்களுடைய வேண்டுகை.
வழக்கு நடைபெற்று வந்த நீதிமன்றத்திலேயே விசாரணைகளை நடத்துங்கள் என்பதே அவர்களுடைய கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை முன்வைத்து அவர்கள் ஏற்கனவே உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். இப்போது வழக்குகள் அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதனால் அவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள்.
இந்த நிலையில், இந்த அரசியல் கைதிகளின் விடயத்தில் இந்த வழக்குகள் அரசியல்சார்ந்த ஒரு விடயம் என்பது உரிய முறையில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அது மட்டுமல்லாமல், எதிரிகளின் மொழியில் அந்த மொழிசார்ந்த சூழலில் வழக்குகள் நடத்தப்பட வேண்டும் என்ற அவர்களுடைய அடிப்படை உரிமையும் மீறப்பட்டிருக்கின்றது.
உரிமை சார்ந்த கோரிக்கை
எதிரிகளின் நலன்களுக்காக அவர்களுடைய விருப்பத்தை ஏற்று வழக்குகள் வேறிடங்களுக்கு மாற்றப்படுவது இலங்கை நீதிமன்ற வரலாற்றில் சாதாரண நிகழ்வாகும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும், பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்கு இராணுவத்தினரே காரணம் என்றும் அரச படையினர் மீது குற்றம் சுமத்தப்பட்ட வழக்குகள், அந்த வழக்குளின் எதிரிகளாகிய இராணுவத்தினருடைய நலன்களுக்காக தமிழ்ப்பிரதேச நீதிமன்றங்களில் இருந்து அனுராதபுரம் பொலன்னறுவை, கொழும்பு போன்ற நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
அவ்வாறு மாற்றப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட தமிழர்களான சாட்சிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்து வெளியிடப்பட்ட ஆட்சேபணைகள் சட்டமா அதிபரினால் கருத்திற் கொள்ளப்படவில்லை. அங்கு எதிரிகளின் நலன்களும், அவர்களுடைய அடிப்படை உரிமையுமே முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இங்கு தமிழ்க் கைதிகளான எதிரிகளின் நிலைமை புறந்தள்ளப்பட்டிருக்கின்றன.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது வழக்குகளை தமிழ்ப்பிரதேசமாகிய வவுனியாவிலேயே விசாhரணை செய்யப்பட வேண்டும் என கோருகின்றார்கள். அந்தக் கோரிக்கையில் நியாயம் சார்ந்தது. நீதியானது. சட்டத்திற்கு உட்பட்டது, எனவே, அந்தக் கோரிக்கை நீதி முறைமையிலும் சட்ட முறைமையிலும் அதற்கும் மேலாக மனிதாபிமான முறையிலும் கவனத்தில் எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மூன்று வாரங்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற கைதிகளின் உடல் உள நிலைமைகள் மோசமடைந்துள்ள நிலையிலும், அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபரோ அல்லது அரசாங்கமோ இன்னுமே முன்வரவில்லை.
ஏற்கனவே நாட்டில் மனித உரிமை நிலைமைகள் சீரடையவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக நீடித்துள்ள நிலையில் இந்த மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு முடிவு காணாதிருப்பதன் காரணமாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான சிறைக்கைதிகளின் அடிப்படை உரிமைகளும்; பேணப்படவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு நல்லாட்சி அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது.
இந்த நிலைமையானது, நிலைமாறுகாலத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கும், நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவதற்குமான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்விக்குறிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
சட்டரீதியாக கைதிகளாக உள்ள எதிரிகளின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த மறுக்கின்ற அரசாங்கத்தினால் மனித உரிமைகளையும் அடிப்படை உரிமைகளiயும் நிலைநாட்டி, நிலைமாறுகாலத்தில் நீதியை நிலைநாட்டி, நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
அடுத்தது என்ன?
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற மூன்று அரசியல் கைதிகளையும் அவர்களுடைய அன்னையர் சென்று நேரடியாகப் பார்வையிட்டிருக்கின்றார்கள். தங்களுடைய பிள்ளைகளின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவர்கள் கண்ணீரோடும் மனக் கலக்கத்தோடும் தெரிவித்திருக்கின்றார்கள்.
இந்தப் பிரச்சினையை வெளியுலகுக்குக் கொண்டு வருவதற்கான ஊடகச் சந்திப்புக்களையும் வேறு முக்கிய சந்திப்புக்களையும் மேற்கொள்வதற்கும் அந்த அன்னையர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார்கள்.
மறுபுறத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் கோரிக்கையை முறையாகச் செவிமடுப்பதற்கு நீதித்துறை தயாராக இல்லை. அவர்களுடைய உடல் நிலைiயை கருத்திற்கொண்டு இந்தப் பிரச்சினையை மனிதாபிமானத்துடன் அணுகுவதற்கும் அரசாங்கம் தயராக இல்லை. இந்த நிலையில் உண்ணாவிரதம் இருக்கின்ற கைதிகள் மூவரும் தமது போராட்டத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றார்கள். அதேபோன்று அரசாங்கமும், இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை. எந்த காரணத்தைக் கொண்டும் வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தி;ற்கு மாற்றப்பட்ட வழக்குகளை வவுனியாவுக்கு மீண்டும் மாற்றுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கின்றது.
இந்தப் பிர்ச்சினையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட இரு தரப்பினருமே இவ்வாறு விடாப்பிடியாக, விட்டுக் கொடுக்காத நிலையில் இருப்பதனால், இந்தப் பிரச்சினையின் அடுத்த கட்டம் என்ன என்பது சிக்கல் நிறைந்த கேள்வியாக மாறியிருக்கின்றது.
இந்த மூன்று அரசியல் கைதிகளின் விடயத்தை முன்னிலைப்படுத்தியும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கறுப்புக்கொடி போராட்டத்தின்போது, போராட்டக்காரர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுக்களின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என விடுத்த அழைப்பை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நிராகரித்துவிட்டார்கள். அத்துடன், ஜனாதிபதியுடன் பேச்சுநடத்துவதில் பயனில்லை என திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றார்கள்.
அதேவேளை, இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் மூலம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த முயற்சியில் அவர் எந்த அளவுக்கு வெற்றிபெறுவார் என்பது தெரியவில்லை.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று அரசியல் கைதிகளின் விடயத்தில் உடனடி முடிவு எடுக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். அவசரமாக அந்த முடிவு எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் தாமதம் செய்யப்படுகின்ற ஒவ்வொரு நிமிடமும் உண்ணாவிரதக் கைதிகளின் உடல் நிலையை மேலும் மேலும் மோசமாக்குகின்ற தருணமாகவே திகழ்கின்றது.
அசம்பாவித நிலைமையை நோக்கி உண்ணாவிரதக் கைதிகளின் உடல் நிலை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்ற சூழலில், இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டியது இப்போதைய அவசரத் தேவையாகும். விதண்டா வாதங்களிலும்;, விவாதங்களிலும் நேரத்தைச் செலவழிப்பதை விடுத்து, பொறுப்புள்ளவர்கள் தேவையையும் நிலைமைiயும் உணர்ந்து உடனடியாகச் செயற்பட முன்வர வேண்டும்.
Spread the love