197
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதியுடனான சந்திப்பில் திருப்தி இல்லை எனவும் ஜனாதிபதி சாதகமான பதிலை கூறாதது எமக்கு ஏமாற்றத்தையே தந்து உள்ளது என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைகழகத்தில் , அனைத்துபீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஸ்னமேனன் , கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் அனுராஜ் மற்றும் சட்டபீட மாணவன் தனஜயன் ஆகியோர் ஊடகவியலாளர்களை சந்தித்து , ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில் விளக்கமளித்தனர். அதன் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண ஆளுனரை நூறு வீதம் நம்பி ஏமார்ந்து விட்டோம்.
அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி பல்கலைகழக சமூகத்தால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதனை அடுத்து ஜனாதிபதியுடன் நேரடியாக சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடி நிரத்தர தீர்வினை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே எமக்கு உறுதி அளித்திருந்தார்.
ஜனாதிபதியுடன் மாணவர்கள் நேரடியாக சந்தித்து பேசினால் நிச்சயமாக ஜனாதிபதி நல்லதொரு முடிவை கூறுவார் என ஆளுனர் கூறியதை நாம் நூற்றுக்கு நூறு வீதம் நம்பி எமது போராட்டத்தை கைவிட்டு ஜனாதிபதியை நேற்றைய தினம் வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தோம்.
சந்திப்பு திருப்திகரமானதாக இல்லை.
அந்த சந்திப்பில் எமது நம்பிக்கைகள் அனைத்தும் பயனற்று போனது. ஏனெனில் எமக்கு ஜனாதிபதி உரிய பதிலை கூறவில்லை. நாம் ஏமாற்றப்பட்டோம். எமக்கு அந்த சந்திப்பு திருப்திகரமானதாக அமையவில்லை.
நீதியமைச்சரும் , சட்டமா அதிபரும் வெளிநாட்டில் உள்ளமையால் அவர்கள் நாடு திரும்பியதும் , அவர்களுடன் கலந்துரையாடி விட்டு எதிர்வரும் புதன்கிழமைக்கு முதல் நல்லதொரு முடிவினை கூறுவதாக உறுதி தந்துள்ளார்.
வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
அதனால் நாம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் புதன் கிழமை முதல் வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். புதன் கிழமைக்கு முதல் எமக்கு நல்லதொரு முடிவு கிடைக்கா விடின் அனைத்து பீட மாணவர்களும் ஒன்றிணைந்து போராட்ட வடிவங்களை மாற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தோம்.
அதேவேளை நேற்றைய தினம் ஜனாதிபதியுடனான சந்திப்பில் , அரசியல் கைதிகளின் வழக்குகள் மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும், அரசியல் கைதிகளை பாலியல் குற்றவாளிகள் , போதை பொருள் குற்றவாளிகள் மரணதண்டனை கைதிகளுடன் ஒரே சிறை கூடத்தில் தடுத்து வைக்காமல் அவர்களை பிறிதொரு சிறைக்கூடத்தில் தடுத்து வைக்க வேண்டும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் , பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் , கடந்த வருடம் பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் அத்துடன் அவர்களின் கொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட ஐந்தம்ச கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளோம்.
மழுப்பலான பதில்களே தரப்பட்டன.
எமது இந்த ஐந்தம்ச கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி தீர்க்கமான பதில்களை வழங்க வில்லை. எம்மை திருப்தி படுத்தும் நோக்குடன் மழுப்பலான பதில்களையே வழங்கி இருந்தார்.
தமிழ் அரசியல் வாதிகள் தமக்குள்ள முட்டி மோத வேண்டாம்.
அதேவேளை அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் தமக்குள்ள முட்டி மோதிக்கொள்கின்றார்கள். பிரச்சனையை தீர்ப்பதில் அக்கறையின்றி செயற்படுகின்றார்கள்.
இந்த தீபாவளி தினத்தினை கறுப்பு தீபாவளியாக அனுச்டிக்குமாறு நாம் மக்களிடத்தே கோரிக்கை விடுத்தோம். பல்கலை கழக மாணவர்கள் நாமும் தீபாவளியை கொண்டாட வில்லை.
ஆனால் நமது தமிழ் அரசியல் வாதிகள் ஜனாதிபதியுடன் இணைந்து தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டு உள்ளனர்.
தமிழ் அரசியல் வாதிகள் தமக்குள்ள முட்டி மோதாமல் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லதொரு தீர்வு கிடைக்க ஒன்றுபட்டு செயற்பட முன்வர வேண்டும்.
கிழக்கு பல்கலை மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பு.
இதேவேளை கிழக்கு பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில் பாரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து மாணவர்களின் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கோருகின்றோம்.
அதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் யாழ்.பல்கலைகழக மாணவர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன என மேலும் தெரிவித்தனர்.
Spread the love