குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மாதங்களில் முன்னோக்கி நகர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணங்கியுள்ளனர். பிரசல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளில் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வதற்கு தயார் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான கொடுப்பனவுகள் குறித்த விடயத்தில் பிரித்தானிய பிரதமர் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் . மேலதிக நடவடிக்கைகள் என்னவென்பது குறித்து தெளிவான நிலை காணப்படுவதாக செய்தியாளர் மாநாட்டில் ஜேர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான விவகாரத்து தொகைக்கு டிசம்பரிற்குள் தீர்வை காண்பது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சற்று கடுந்தொனியில் கருத்தை வெளியிட்டுள்ளார். நிதி கொடுப்பனவு விவகாரத்தில் இரு தரப்பும் சிறிதளவும் முன்னேற்றத்தை எட்டவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் பல விடயங்கள் பிரித்தானிய பிரதமரின் கரங்களிலேயே உள்ளது என தெரிவித்துள்ளார்.