Home உலகம் ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் `மரணத்தீவு`

ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் `மரணத்தீவு`

by editortamil
படத்தின் காப்புரிமைALEKSEY SUHANOVSKY
Image captionமட்யக் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்ட தனது மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் பெண்

ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.ஆனால் அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் (ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடவும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் `மரணத் தீவு` என அழைக்கப்படுகிறது.

நெருங்கிச் சென்றபோது, என்னால் ஒரு கலங்கரை விளக்கத்தையும், சில வானொலி கோபுரங்களையும் பார்க்க முடிந்தது. நானும், என்னுடன் வந்தவர்களும் படகிலிருந்து குதித்து, பாலைவனமாக இருந்த கடற்கரையில் நடந்தோம். அங்கிருந்த நாய்கள் எங்களை சூழ்ந்து கொண்டு குரைத்தன. அவற்றுக்கு பார்வையாளர்களை பார்த்து பழக்கமில்லை. இந்த ஆள் அரவமற்ற பகுதியில் வாழக்கூடியவர்கள், எல்லை காவலர்களும் , ஒரு சில வானிலை ஆய்வாளர்களும்தான்.

சோவியத் சகாப்தத்தில் , இந்த மட்யக் தீவிலுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்காக படகுகள் மூலமாக பார்வையாளர்கள் வந்தார்கள். எஞ்சியுள்ள சிறைக்கூடங்களின் எச்சங்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. ஆனால் இது கடந்த 1918-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் பொறுப்பாளர்கள் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் நாட்டவர்கள் என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.

மட்யக் தீவு
படத்தின் காப்புரிமைKIRILL IODAS

இந்த பிராந்தியத்தின் தலைநகரான, ஆங்கிலத்தில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்-ஆர்கேன்ஜெல் என அறியப்படும் நகரில் வளர்ந்த சக பணியாளரான நடாலியா கோலிஷேவா, இந்த இடத்தின் மீது பயம் இருப்பதாகவும், உள்ளூர்வாசிகள் இதனை மரணத்தீவு என அழைப்பார்கள் எனவும் கூறினார்.

“நான் சிறுகுழந்தையாக இருந்தபோது, நீ ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்றால்,வெள்ளையர்கள் வந்து உன்னை மட்யுக்கிற்கு தூக்கிச் சென்றுவிடுவார்கள் என மக்கள் கூறுவார்கள்.எனக்கு அது புரியாது. மட்யக் என்றால் என்ன? வெள்ளையர்கள் யார்? என நான் கேள்வி கேட்கும் போது, எனது பாட்டி வாயை மூடு என எச்சரித்துவிட்டு, முகத்தை திருப்பிக் கொள்வார். இதற்கு அர்த்தம் இத்துடன் பேச்சு முடிந்துவிட்டது என்பதுதான்.“ என நடாலியா கூறினார்.

மட்யக் வரைபடம்

1917-ஆம் ஆண்டு ரஷ்யப்புரட்சி ஏற்பட்ட பின்னர் வெள்ளையர்கள் என அழைக்கப்பட்ட குழுவினர் , போல்ஷ்விக்குகளுக்கு எதிரானவர்களானார்கள். ஜார் ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அணியும் கிரீம் நிற சீருடைகள் மூலம் அவர்களுக்கு இந்த பெயர் வந்தது.

அவர்களில் சிலர் மீண்டும் முடியாட்சி வர வேண்டும் என விரும்பிய பிற்போக்கு ராணுவ அதிகாரிகள், மற்றவர்கள் மித சோஷியலிஸ்டுகள், சீர்திருத்தவாதிகள்,வர்த்தகர்கள், மீனவர்கள் அல்லது விவசாயிகள்.

1917-ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் போல்ஷ்விக்குகள் ஆட்சியை கைப்பற்றியபோது, ஜெர்மனி மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்சுடன் இணைந்து முதல் உலகப் போரில் ரஷ்யா தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருந்தது.

லெனின் ஆட்சிக்கு வந்ததும் உணவு உற்பத்தியை பெருக்கி,உயர்குடி மக்களின் நிலத்தை பகிர்ந்தளிப்பது மட்டுமல்லாமல் அமைதியையும் கொண்டு வருவேன் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உறுதி அளித்தார். அவர் ஜெர்மனியுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மாதங்களில், கூட்டணித் தலையீடு என்ற பெயரில் பிரிட்டன், பிரான்ஸ்,அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்காண ராணுவ வீர்ர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களில் சிலர் தென் பகுதிக்கும்,தொலைவில் உள்ள ரஷ்ய கிழக்குப் பகுதிக்கும்,பிரிட்டனின் கீழ் இருந்த பத்தாயிரம் வீர்ர்கள் ஆர்ட்டிக் துருவப் பகுதியில் உள்ள ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கும் அனுப்பப்பட்டனர். அந்த பகுதியில் ஜெர்மானியர்கள் நீர்மூழ்கிக் கப்பல் தளம் அமைக்காமல் தடுக்கவும், அங்கிருக்கும் ராணுவ மையத்தை பாதுகாப்பதும் இவர்களின் பணி என தெரிவிக்கப்பட்டது.

1919-ஆம் ஆண்டு ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதியில் அணிவகுத்து நிற்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் வீரர்கள்
படத்தின் காப்புரிமைLORD IRONSIDE
Image caption1919-ஆம் ஆண்டு ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதியில் அணிவகுத்து நிற்கும் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் வீரர்கள்

ஆனால் ரஷ்ய உள்நாட்டுப் போரின் ஆரம்பக்கட்டத்தில் போது, இந்த வெளிநாட்டுப் படைகள் வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்தனர். வின்ஸ்டன் சர்ச்சில் போன்ற சில ஐரோப்பிய அரசியல் தலைவர்களுக்கு, ஐரோப்பா முழுவதும் கம்யூனிசம் பரவுவது கவலையை அளித்தது.

“1918-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி கூட்டணிப்படைகள் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க் பகுதிக்கு வந்தடைந்த சில காலத்தில், அவர்கள் மக்களை சிறைபிடிக்கத் துவங்கினர். அவர்களுக்கு யாரை நம்ப வேண்டும் என தெரியவில்லை.யார் கம்யூனிஸ்ட்டுகள், யார் வெள்ளையர்கள் என்றும் அவர்களால் வேறுபாடு அறிய முடியவில்லை. இதனால் சந்தேகமிருக்கும் அனைவரையும் சிறைபடுத்த அவர்கள் முடிவெடுத்தனர்.“என மாஸ்கோவைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான லுட்மிலா நோவிக்காவா கூறுகிறார்.

மைய சிறைச்சாலையில் கைதிகள் எண்ணிக்கை அதிகரித்ததனால், பிரச்சனை ஏற்படுத்தக்கூடியவர்களாக கருதப்பட்ட கைதிகள், அங்கிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மட்யக் தீவுக்கு இடம் மாற்றப்பட்டனர். அங்கு முதற்கட்டமாக கொண்டு செல்லப்பட்ட கைதிகள், தங்களுக்கான சிறைச்சாலையை தாங்களே அமைக்க வற்புறுத்தப்பட்டனர்.

மட்யக் தீவின் சிறை முகாமில் வைக்கப்பட்டிருந்த போல்ஷ்விக் சிறைவாசிகள்
படத்தின் காப்புரிமைLIBRARY OF CONGRESS
Image captionமட்யக் தீவின் சிறை முகாமில் வைக்கப்பட்டிருந்த போல்ஷ்விக் சிறைவாசிகள்

போதுமான கழிப்பறை மற்றும் மாற்று உடைகள் வசதி இல்லாததால், அங்கிருந்த கைதிகளிடம் தைபஸ் காய்ச்சல் காட்டுத்தீ போல பரவியது. அங்கிருந்த 1000 கைதிகளில், நோய் காரணமாகவோ,சுடப்பட்டோ, சித்தரவதை செய்யப்பட்டோ 300 பேர் கொல்லப்பட்டனர்.

பனிக்காலத்தில் இங்கு தட்பவெட்பநிலை 30 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக இருக்கும். இதையும் கைதிகளை சித்திரவதை செய்ய பயன்படுத்திக் கொண்ட கூட்டணிப்படைகள், அங்கு `ஐஸ் செல்` எனப்படும் பனிக்கட்டி அறைகளை அமைத்தனர். இதில் அடைக்கப்படும் கைதிகள், குளிரினால் சித்திரவதை அனுபவிப்பார்கள் அல்லது உயிரிழப்பார்கள் அல்லது தோலுறைவு காரணமாக தங்கள் கால்களை இழப்பார்கள்.

சோவியத் காலகட்டத்தில், இங்கு சித்திரவதையை அனுபவித்த போல்விஷ்க்குகள் அதிகம் நினைவு கூறப்பட்டார்கள். இந்த முகாமிற்கு அருகில் உள்ள சிறிய குன்றில், 25 அடி உயரத்தில் இவர்கள் நினைவாக நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் `தலையீட்டாளர்களின் சித்திரவதை காரணமாக உயிரிழந்த தேச பக்தர்களுக்கு மரியாதை அளிக்கும் விதமாக அமைக்கப்பட்டது` என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

மட்யக் தீவில் உள்ள நினைவுத்தூண்
படத்தின் காப்புரிமைKIRILL IODAS
Image captionமட்யக் தீவில் உள்ள நினைவுத்தூண்

`வெள்ளையர்களை போலவே போல்விஷ்க்குகளும் பல குற்றங்களை இழைத்தனர். ஆனால் அவை சோவியத் ரஷ்யாவில் பல தசாப்தங்களுக்கு குறிப்பிடப்படவில்லை. இருபுறமும் கொடுமைகள் அரங்கேறின. ஆனால் அவற்றின் அளவுகள் வெவ்வேறானவை.` என வரலாற்றாசிரியர் லுட்மிலா தெரிவிக்கிறார்.

வடக்கில் பல மரண முகாம்கள் போல்ஷ்விக்குகளால் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஆர்க்ஹான்ஜெல்ஸ்க்கில் இருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ள ஹோல்கோமோரி பகுதியில் முதல் முகாம் அமைக்கப்பட்டது. இங்கு மூன்றாயிரத்திலிருந்து, எட்டாயிரம் வரையிலான கைதிகள் அடைக்கப்பட்டு, அவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் வெள்ளை ராணுவ அதிகாரிகள் மற்றும் குரோன்ஸ்டாட் பகுதியைச் சேர்ந்த போல்விஷ்க்குகளுக்கு எதிராக கலகம் செய்த மாலுமிகள். ஆனால் மற்றவர்கள் எதிர் புரட்சியாளர்கள் என முத்திரை குத்தப்பட்ட மதபோதகர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanks – BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More