அனுராதபுரம், மாவட்டத்தில் கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மாணவி ஒருவர் வாந்தி எடுத்ததனை தொடர்ந்து அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அவரை பாடசாலையில் இருந்து நீக்குவதற்கு அந்த பாடசாலையின் அதிபர் எடுத்துள்ள தீர்மானம் குறித்து விசாரணை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு படிக்கின்ற 15 வயதுடைய குறித்த மாணவி பாடசாலைக்குள் திடீரென வாந்தி எடுத்ததால், அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக தெரிவித்து பாடசாலை அதிபர் அவரை பாடசாலையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாணவியை தம்புள்ள அரசு வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அவர் கர்ப்பம் அடையவில்லை என உறுதி செய்ததாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான விசாரணைகளுமின்றி சம்பந்தப்பட்ட மாணவியை பாடசாலையிலிருந்து நீக்குவதற்கு அதிபர் எடுத்துள்ள தீர்மானம் குறித்து, மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பின்னர் இந்த மாணவிக்கு ஏற்பட்டுள்ள அநீதியை நிவர்த்தி செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
அதேவேளை இந்த சம்பவம் குறித்து கல்வி அமைச்சம் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.