“தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், அதற்கு முன் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மகாலை காட்டி விடுகிறேன்” என நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ருவீட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
உத்தரபிரதேச மாநில அரசாங்கம் சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை நீக்கியது. அதனைத்தொடர்ந்து அந்த மாநிலத்தை சேர்ந்த பாரதீயஜனதா சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர், தாஜ்மஹால் இந்தியா வரலாற்றில் களங்கம் எனக் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு அனைவரதும் கவனத்தை ஈர்துள்ளார்.
அவர் தனது ருவீட்டர் பக்கத்தில், “நீங்கள் தாஜ்மகாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு முன்பு நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் இருக்கும் பாரதீயஜனதா ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்தவர்.
பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மவுனமாக இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது “பிரதமர் மோடி தன்னை விட பெரிய நடிகர்” என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு கர்நாடக பாரதீயஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.