இரண்டு நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் கட்டார் வெளிவிவகார அமைச்சர் செய்க் முஹம்மத் பின் அப்துல் ரஹ்மான் அல்தானிக்குமிடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம் பெற்றுள்ளது.
இரண்டு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறையில் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன் கட்டார் முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இலங்கையிலுள்ள புதிய முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஜனாதிபதி விளக்கினார்.
இரண்டு நாடுகளுக்கிடையில் இருந்து வரும் இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் புதிய உறவுகளை ஏற்படுத்தவும் ஜனாதிபதியின் இந்த பயணம் உதவும் என கட்டார் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
பெரும் எண்ணிக்கையான இலங்கையர்கள் தற்போது கட்டார் நாட்டில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருவதுடன் எதிர்காலத்தில் இலங்கை தொழில் வல்லுனர்களுக்கு கட்டார் நாட்டில் அதிக சந்தர்ப்பங்களைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கை குறித்து கட்டார் வெளிவிவகார அமைச்சர் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் தோஹா நகரில் நடைபெற்ற கட்டார் – இலங்கை விசேட வர்த்தக மற்றும் முதலீட்டு சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.