முல்லைத்தீவில் இரு பொதுமகனுக்கு ஒரு இராணுவம் எனும் விகிதாசாரத்தில் காணப்படுகின்ற போதிலும் , முல்லைத்தீவு மாவட்டத்தில் குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படுவதாக வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 ஆயிரம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். அத்துடன் பொலிசார் , கடற்படை மற்றும் விமான படையினரும் நிலை கொண்டுள்ளனர். இருந்த போதிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் போதை பொருள் கடத்தல், கொள்ளை போன்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து காணபடுகின்றது. அதனால் தற்போது இளைஞர்கள் தமது ஊர்களை பாதுகாக்கும் பணிகளில் இரவில் ஈடுபட்டு உள்ளனர். தமது ஊர்களில் விழிப்பு குழுக்களை அமைத்து இளைஞர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்தார்.