குளோபல் விசேட தமிழ் செய்தியாளர்
வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் மீண்டும் வரட்சி ஏற்பட்டுள்ளது. பருவகால மழை வீழச்சி கடந்த சில தினங்களாக மிகக் குறைந்த அளவில் பெய்து வந்தபோதும், கடுமையான வரட்சிநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக அப் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிக்கும் மக்கள் வரட்சி காரணமாக தற்காலிகமாக உறவினர் வீடுகளில் சென்று வசித்து வருகின்றனர். கிணறுகளில் நீர் வற்றியமை காரணமாக அத்தியாவசிய தேவைக்காக பெரும் துன்பங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். குடிநீருக்கான தட்டுப்பாடும் இப் பகுதியில் அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி நகரப் பாடசாலை ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர், நீர்த்தட்டுப்பாடு காரணமாக, ஆனந்தபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தற்காலிகமாக குடிபெயர்ந்து வந்திருப்பதாக குறிப்பிடுகின்றார். பாரதிபுரம் நீர் தட்டுப்பாடான பகுதி என்றபோதும் இம்முறை இடம்பெயரும் நிலைக்கு வரட்சி தள்ளியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, பாரதிபுரம், மலையாளபுரம் மற்றும் கிருஷ்ணபுரத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், தொழில்புரிவோர் எனப் பலதரப்பட்டவர்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருப்பதாக அப் பகுதிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரதிபுரம் பாடசாலையின் கிணறு வற்றிய நிலையில் காணப்படுவதாகவும் பாடசாலை சமூகம் உள்ளிட்ட இப் பகுதி மக்கள் நாளாந்தம் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
இத்தகைய வரட்சி நிலையை போர்க்கால நிலவரமாக கருத்தில் கொண்டு, கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபை அப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீருக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதனை பிரதேச சபை நிவர்த்தி செய்ய முன் வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.