குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து நவம்பர் 14 மற்றும் 15 ம் திகதிகளில் பிரித்தானிய நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. 2019 மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் சட்டமூலம் குறித்தே நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. இந்த சட்டமூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாற்றிய சட்ட மூலத்தை கைவிடுவதை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான அதிக அதிகாரங்களை வழங்குகின்றது என முக்கிய கட்சிகள் விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக அதிருப்தியடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தெரேசா மே அரசாங்கம் பெற்றால் மாத்திரமே இந்த சட்ட மூலம் நிறைவேறும் என்ற நிலை காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.