முகலாயர்களின் வரலாற்றுச் சின்னங்கள் குறித்து கடந்த சில நாட்களாக சர்ச்சைகளும், கடும் விமர்சனங்களும் எழுகின்றன. இந்த சர்ச்சையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் முதலில் சிக்கியது. இதையடுத்து டெல்லியின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான ஹுமாயூன் நினைவுச் சின்னம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
டெல்லி நிஜாமூதீன் பகுதியில் 35 ஏக்கரில் ஹுமாயூன் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது. இதுபற்றி உத்தரபிரதேச மத்திய ஷியா வக்பு வாரியத் தலைவரான வஸீம் ரிஜ்வீ சர்ச்சைக்குரிய யோசனையை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடிக்கு ரிஜ்வீ சமீபத்தில் எழுதிய கடிதத்தில், “டெல்லியில் முஸ்லிம் கல்லறைகளில் இடப்பற்றாக்குறை எழுந்துள்ளது. இதை சமாளிக்க ஹுமாயூன் நினைவுச் சின்னத்தை இந்திய வரலாற்றுச் சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். இதன் பின் அதனை இடித்து முஸ்லிம்களின் கல்லறைக்காக ஒதுக்க வேண்டும். வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி, இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் தங்கள் ஆட்சியை தவறாகப் பயன்படுத்தி, சுமார் 3,000 இந்து கோயில்களை இடித்தவர்கள் ஆவர். இஸ்லாத்தில் நினைவுச் சின்னம் அமைக்க அனுமதி இல்லை. எனவே ஹுமாயூன் நினைவுச் சின்னத்தை இடிக்க இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியில் முஸ்லிம் கல்லறைகளில் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருவதால் புதிய இடம் ஒதுக்குமாறு டெல்லி மற்றும் மத்திய அரசுகளுக்கு அகில இந்திய ராப்தா-எ-மஸ்ஜீத்தே மதாரிஸே இஸ்லாமியாவின் அமைப்பாளர் சையது அகமது அலி கடந்த 15-ம் தேதி கோரிக்கை விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து ரிஜ்வீ இந்த கடிதத்தை பிரதமருக்கு எழுதியுள்ளார். இதற்கு சன்னி முஸ்லிம் பிரிவினரிடையே பாரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.