195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர். அரியாலை எ.வி.ஒழுங்கையை சேர்ந்த தாய் , இரு ஆண் பிள்ளைகள் மற்றும் ஒரு பெண் பிள்ளை அடங்கலாக நால்வரும் தவறான முடிவால் உயிரை மாய்த்துள்ளனர்.
தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் உயிரிழப்பு.
உயரிழந்தவர்கள் அதே இடத்தை சேர்ந்த கிருஷாந்தன் சுநேந்திரா (வயது 28) மூத்த மகளான கிருஷாந்தன் ஹர்ஷா (வயது 04) இரண்டவாது மகனான கிருஷாந்தன் சஜித் (வயது 02) மற்றும் மூன்றாவது மகனான கிருஷாந்தன் சரவணா (வயது 01) ஆகிய மூவருமே உயரிழந்தவர்கள் ஆவார்கள்.
கணவன் 58 நாட்களுக்கு முன்னர் தற்கொலை.
இவர்களின் குடும்ப தலைவரான கணவன் இராமன் கிருஷாந்தன் கடந்த 03. 09. 2017ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவன் உயிரிழந்த சோகத்தில் இதுவரை காலமும் வாழ்ந்தவர்கள் இன்று தவறான முடிவெடுத்து தனது பிள்ளைகளுடன் மனைவி உயிரை மாய்த்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
1 கோடியே 17 இலட்சம் கடன் கொடுப்பு.
இக் குடும்பத்தின் தலைவரான கணவன் கிருஷாந்தன் தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு கோடியே 17 இலட்ச ரூபாய் பணத்தினை கடனாக கொடுத்துள்ளார். அக் கடன் தொகையை நண்பர் கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் பெருமளவான கடன் கொடுத்த காரணத்தால் கணவன் பூர்விக சொத்துக்கள் சிலவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
ஏமாற்றம்.
தனது நண்பனுக்கு கடன் கொடுக்கும் போது சாட்சியமாக நண்பனின் மனைவி மற்றும் நண்பனின் தம்பி ஆகியோர் நின்று இருந்தனர். கடன் எந்த விதமான பொறுப்புக்களும் இல்லாமல் நட்பின் அடிப்படையில் , நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது.
கடனை ஆறு மாத காலத்திற்கு பின்னர் திருப்பி கேட்ட போது , காசோலையை வழங்கியுள்ளார். குறித்த காசோலையை வங்கியில் வைப்பு செய்ய போது , வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பியுள்ளது.
கடனை திருப்பி கொடுக்க மறுப்பு.
அதன் பின்னர் கடனை கேட்க நண்பன் , நண்பனின் , மனைவி மற்றும் நண்பனின் தம்பியிடம் சென்ற போது வாங்கிய கடனை கொடுக்காது ஏமாற்றியதுடன் முடிந்தால் பணத்தினை வாங்கி பார் என சவால் விட்டுள்ளனர். அத்துடன் தம்பியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
10 இலட்சம் திருப்பி கொடுப்பு.
அதன் பின்னர் கடன் தொகை திருப்பி தராது ஏமாற்றியமை தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் பின்னர் பத்து இலட்ச ரூபாய் பணத்தினை சிறிது சிறிதாக கடனை பெற்றவர் கொடுத்துள்ளார். மிகுதி பணம் கொடுக்கவில்லை.
குடும்பமாக உயிரை மாய்க்க முயற்சி.
அந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி வழக்குக்காக நீதிமன்றுக்கு சென்று வந்த பின்னர் மறுநாள் 31ஆம் திகதி குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்கள். முதலில் கணவன் மருந்தை குடித்துள்ளார். அவர் மருந்தை குடித்து அவஸ்தைப்பட்டத்தை பொறுக்க முடியாத மனைவி தானும் மருந்தை அருந்தாது தனது பிள்ளைகளுக்கும் மருந்தை அருந்த கொடுக்காது கணவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக கணவனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அவரை காப்பாற்றும் முயற்சித்துள்ளார்.
கணவன் உயிரிழப்பு.
மருத்துவ மனையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் கணவனான இராமன் கிருஷாந்தன் கடந்த மாதம் 03ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கணவன் சிகிச்சை பெறும் வேளையில் வைத்திய சாலையில் வைத்து தாய் , மற்றும் சிறிய தாயிடம் தான் உயிரிழந்தால் , தனது மனைவி பிள்ளைகளை கவனமாக பார்க்குமாறு உறுதி வாங்கியுள்ளார்.
மனைவி பிள்ளைகள் உயிரிழப்பு.
கணவனின் உயிரிழப்பின் பின்னர் மனைவி பிள்ளைகளை உறவினர்கள் பாதுகாப்பாக பார்த்துகொண்ட நிலையில் இன்றைய தினம் வீட்டில் தாயார் மட்டும் இருந்த நிலையில் அவரை தூங்க வைத்த பின்னர் தனது பிள்ளைகளின் உயிரை மாய்த்த பின்னர் , தானும் மாய்த்துள்ளார் சுநேந்திரா எனும் குடும்ப பெண்.
அவர் தனது உயிரை மாய்த்து கொள்ள முதல் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் தனது குடும்பத்தினருக்கு இரு கடிதங்களை எழுதி வைத்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் ,
” எனது கணவர் கடன் கொடுத்து ஏமாந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். அவர் இல்லாத வாழ்க்கையை வாழ முடியவில்லை. பிள்ளைகளுக்காக வாழலாம் என நினைத்தால் , அப்பா எப்ப வருவார் ? அப்பா கண் துறந்துட்டாரா ? எப்ப பார்ப்பார் ? ஏன் வரவில்லை ? போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.
எனது கணவரின் தற்கொலைக்கு ஸ்ரீசங்கர் அவர் மனைவி சுகன்ஜா மற்றும் ஸ்ரீசங்கரின் தம்பி ஸ்ரீதரன் ஆகியோரே காரணம் தவறு செய்பவனை விட தவறு செய்ய தூண்டுபவனே குற்றவாளி என்பது போல நாங்கள் இந்த நிலைக்கு வர இவர்களே காரணம்.
உயிரை விட மேலானது எதுவுமில்லை எங்கள் பக்க நியாயத்தை நிரூபிக்க , கடவுள் ஒரு சிலரையே சத்தியத்தை காப்பாற்ற இந்த பூவுலகத்தில் படைத்துள்ளார். அந்த வகையில் நாங்கள் உங்களை நினைக்கின்றோம். இந்த வழக்கை தங்களின் பார்வையின் கீழ் எடுத்து நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். என அக்கடிதத்தில் எழுதப்பட்டு உள்ளது.
அதேவேளை தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தில் ,
என்னை மன்னித்து விடுங்கள் பிறந்தவர்கள் யாவரும் இறப்பவர்களே .. ஒன்றை மட்டும் நினைத்து ஆறுதல்படுத்துங்கள். உங்கள் பிள்ளையின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி உள்ளீர்கள். என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே.
நாங்கள் குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதி வரை அதற்காக போராடினோம். முடியவில்லை. போகின்றோம். என்னுடையதும் என் பிள்ளைகளினதும் , இறுதி சடங்கை என் வீட்டார் நடத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் என் கணவன் வீட்டு பகுதிக்கு கொடுக்க வேண்டாம். இதுவே என் விருப்பம். எம் மரண வீட்டை மிகவும் எளிமையாக மேளம் போஸ்மார்ட்டம் இல்லாமல் உடனடியாக எடுக்கவும். என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Spread the love