குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றின் மீது நூறு குண்டுகள் வீசப்பட வேண்டுமென முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் அதிகாரங்களை குறைத்து பெயரளவு பாராளுமன்றமாக உருவாக்கி மாகாணசபைகளுக்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்பட்டால் ஒரு குண்டு அல்ல நூறு குண்டுகள் பாராளுமன்றின் மீது வீசப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசியாவிலேயே இலங்கை மிகவும் முக்கியமான நாடாக காணப்படுகின்றது எனவும் இதனால் அனைவரும் இலங்கை குறித்து அவதானித்து வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
65, 000 கிலோ மீற்றரைக் கொண்ட இந்த சிறிய நாட்டின் வளங்கள் பற்றி எம்மை விடவும் அமெரிக்காவிற்குத் தெரியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக இந்த நாட்டை ஒன்பது துண்டுகளாக பிளவடையச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள், நேரடியாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இவ்வாறு நாடு பிளவடைந்திருக்க வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார் இதன் காரணமாகவே பிரபாகரன் உயிருடன் இருந்த காலத்திலும் வடக்கு மட்டும் போதாது கிழக்கும் தேவை எனக் கோரப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் நாட்டை துண்டாடுவதே நோக்கமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். முதுகெலும்பு அற்ற தலைவர்களைக் கொண்டு இந்த நாட்டை ஆட்சி செய்ய முயற்சிக்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.