குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் (ICTA ) நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆட்பதிவு திணைக்களம் நிராகரித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களத்தினால் பேணப்பட்டு வரும் தகவல்களை பரிமாறிக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமான இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிறுவனம் கோரியுள்ளது.
எனினும், தம்மிடம் காணப்படும் பொதுமக்களின் தகவல்களை பரிமாறிக்கொள்ள முயாது என அறிவித்துள்ள ஆட்பதிவு திணைக்களம் இவ்வாறு தகவல்களை பரிமாறுவது நபர்களின் அந்தரங்கத்தை பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் உட்கட்டுமான வசதிகள் அமைச்சினால் இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது நிராகரிக்கப்பட்டுள்ளது. போதியளவு தகவல்கள் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
நபர்களின் விபரங்கள் உள்ளிட்ட அட்டைகளை அச்சிடுவதற்கு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் முகவர் நிறுவனம் உத்தேசித்துள்ள நிலையில் இதற்கென டிஜிட்டல் உட்கட்டுமான அமைச்சு 8 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளது.
எனினும், இவ்வாறு ஆட்பதிவு திணைக்களம் வசம் உள்ள தகவல்களை வழங்குவது நபர்களின் அந்தரங்தன்மை குறித்த உரிமையை பாரியளவில் மீறுவதாக அமையும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், திருத்தங்களுடன் மீளவும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.