குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தம்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நீதிமன்றால் குறித்த ஆறு பேருக்கும் வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை தொடர்பில் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சென்று மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் தாம் அதற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
களுத்துறைச் சிறைச்சாலையில் 1998 ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடச் சென்றிருந்த சமயமே கைதிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.
களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்ற ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என 6 பேருக்கு 10 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.
1998ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது கைதி மற்றும் தடுப்பிலிந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல் தொடர்பில் எமில்காந்தன் என அழைக்கப்படும் அன்ரன் சமில் லக்மி கண்ணன் உள்ளிட்ட 9 போராளிகள் மற்றும் 7 பேர் அடங்களாக 16 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் முன்வைத்தார்.
அவர்களில் 6 பேரை குற்றவாளிகள் என இன்று அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்தத் தண்டனையை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு சிறைத்தண்டனை
Oct 30, 2017 @ 08:32
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்த வேளையில், களுத்துறைச் சிறைச்சாலைக்கு தேவானந்தா பயணம் செய்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக பாதுகாப்பு தரப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட எமில் காந்தன் உள்ளிட்ட 16 மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் இன்று பத்தரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. எமில் காந்தன் உள்ளிட்ட ஏனைய ஒன்பது சந்தேக நபர்களையும் கொழும்பு உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
இதேவேளை தன்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.