குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் நிரபராதி என விடுவிக்கப்பட்டவரால் மிரட்டப்பட்ட காவல்துறை உத்தியோகஸ்தர் மாணவி கொலை வழக்கில் சாட்சியமாக இல்லை என ஊர்காவற்துறை காவல்துறையினர் மன்றில் தெரிவித்தனர்.
மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் கொலை வழக்கில் நிரபராதி என காணப்பட்டார். இருந்த போதிலும் மாணவி கொலை வழக்கில் தன்னை சிக்க வைத்த காவல்துறை உத்தியோகஸ்தரை வெட்டுவேன் என மிரட்டிய வழக்கில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நடைபெற்றது. அதன் போது குறித்த சந்தேக நபர் மிரட்டல் விடுத்த காவல்துறை உத்தியோகஸ்தர் மாணவி கொலை வழக்கில் சாட்சியமாக இணைக்கப்பட்டு உள்ளாரா என்பதை அறிய மாணவி கொலை வழக்கின் சாட்சி பட்டியலை மன்றில் சமர்ப்பிக்க ஏற்கனவே ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் பணிக்கப்பட்டு இருந்தது.
அதன் பிரகாரம் இன்றைய தினம் குறித்த சாட்சி பட்டியல் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் குறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் சாட்சியமாக இணைக்கப்;பட்டு இருக்கவில்லை. அதனை தொடர்ந்து சந்தேகநபர் தொடர்பிலான விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் குறித்த வழக்கினை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அன்றைய தினம் வரையில் சந்தேக நபரை விளக்க மறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டார்.