அவுஸ்திரேலியாவினால் பப்புவா நியூ கினியாவில் உள்ள மனுஸ் தீவு அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படுவதையடுத்து அகதிகளை வெளியேற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை அங்கு ஆரம்பமாகியுள்ளது. படகுகள் மூலம் அஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை அந்நாட்டு அரசாங்கம் மானுஸ் தீவு மற்றும் நவ்ரூவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளது. இந்தநிலையில் பப்புவா நியூ கினியாவின் நீதிமன்றம் அங்கு அகதிகள் முகாம் செயல்படுவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்ததையடுத்து மனுஸ் தீவிலுள்ள அகதிகள் முகாம் இன்றையதினம் மூடப்படுகின்றது.
அகதிகளில் பலர் அங்கிருந்து வெளியேறுவதற்கு மறுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் அகதி முகாமியுள்ள குடிநீர், மின்சாரம் மற்றும் உணவு ஆகியவை வழங்கப்படுவது இன்றுமாலை 5 மணியிலிருந்து நிறுத்தப்படும் எனவும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாளை புதன்கிழமை முகாமிற்குள் நுழைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த முகாமிலுள்ள கைதிகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், குடிநீர் மற்றும் உலர்ந்த பிஸ்கட்டுகள் போன்றவற்றை சேமித்து வைக்க ஆரம்பித்ததுடன், தற்காலிக மழைநீர் சேமிப்பு பகுதிகளையும் நிறுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.