அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில்இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியாகி மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் மேற்கு நெடுஞ்சாலையில் உள்ள பாடசாலைக்கு அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்த போது இனம் தெரியாத நபர் ஒருவர் பார ஊர்தி ஒன்றை வேகமாக செலுத்திச் சென்று அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது மோதியுள்ளார். இதனைத் தொடர்ந்து தான் கொண்டு சென்ற துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார். இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தகவலறிந்த காவற்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கி சூடு நடத்தியவரை கைது செய்தனர். . அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இது கோழைத்தனமான தாக்குதல் என மன்ஹாட்டன் மேயர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி வெள்ளை மாளிகை நிர்வாகம் கேட்டுள்ளது.
சமீப காலமாக தீவிரவாத அமைப்பினர் வாகனங்களில் சென்று அப்பாவி மக்கள் மீது மோதியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.
இதேவேளை இந்தத் தாக்குதலை நடத்தியவர் 29 வயதுர்டைய Sayfullo Habibullaevic Saipov, எனவும் Uzbekistan இல் இருந்து 2010ல் அமெரிக்காவில் குடீயேறிய குடியேற்றவாசி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அமெரிக்கா: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம்
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நியூயார்க் காவற்துறையினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது நிர்வாகம் செய்து தரும். அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக உள்ளோம். இதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக டிரம்ப் ருவிட்டரில் கூறுகையில், “ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை மீண்டும் இங்கு அனுமதிக்க விடமாட்டோம்” என பதிவிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் திரேசாமே அமெரிக்க தாக்குதலுக்கு கண்டனம்.
அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பிரித்தானிய பிரதமர் கண்டனம் வெளியிட்டு உள்ளார். தனது ருவீட்டர் செய்தியில் பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வலியுறுத்தி உ்ளார்.