குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்று முற்பகல் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பிரதமர் ரணில் விக்கரமசிங்கவிடம் விசாரணைகள் நிறைவுற்றுள்ளது. இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆணைக்குழுவிடம் தெளிவுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஒன்று கிடைத்ததாகவும் இங்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தை வழங்கியமைக்காக ஆணைக்குழுவின் பணிப்பாளருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன்போது நாட்டின் பொருளாதாரம்,நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல விடயங்களை தெளிவுப்படுத்தியதாகவும்,தமது கட்சியின் தலைவர்,செயலாளரர் மற்றும் அமைச்சர்களும் எவ்வித பயமுமின்றி ஆணைக்குழுவில் முன்னிலையானதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இணைப்பு 2 – பிரதமர் ரணில் அடுத்த வாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
Nov 3, 2017 @ 03:49
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமருக்கு 16 விடயங்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி ஆவணமொன்றை அனுப்பி வைத்திருந்தது. இந்த ஆவணத்திற்கு பிரதமர் எழுத்து மூலம் அண்மையில் பதிலளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் நேரடியாக சாட்சியமளிக்க வேண்டுமென ஆணைக்குழு கோரியிருந்தது.
இந்தக் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் வாரத்தில் பிரதமர் ரணில், மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை குழுவில் நேரில் முன்னிலையாகி சாட்சியமளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமரிடம் விசாரணை?
Nov 2, 2017 @ 07:49
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. மத்திய வங்கி பிணை முறி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக் குழு பிரதமரிடம் சாட்சியங்களை பதிவு செய்து கொள்ள உள்ளது.
ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. எந்த திகதில் எப்போது இந்த பிரதமர் முன்னிலையாக வேண்டும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன