Home இலங்கை மனிதாபிமான வைத்திய சேவையைப் புரிந்து கொள்ளுங்கள்

மனிதாபிமான வைத்திய சேவையைப் புரிந்து கொள்ளுங்கள்

by admin

 

அதிகரித்துவரும் வைத்திய தேவைகளை சமாளிப்பதற்காக பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நாளொன்றில் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிறுவனம் மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்தது. 24 மணி நேரமும் இயங்கும் போதனா வைத்தியசாலை போன்ற சேவை நிறுவனங்கள் மிகவும் கடமையுணர்வும் அர்ப்பணிப்பும் உள்ளவர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. முறையற்ற விமர்சனங்கள் இங்கு கடமை புரிபவர்களை மோசமாகப் புண்படுத்துகின்றது. இதனை தொடர்ந்து செய்வதால் இப்பகுதியில் கடமையாற்றுவதற்கு வைத்தியர்களும் ஏனையவர்களும் முன்வரமாட்டார்கள். இங்கே தற்போது கடமையாற்றுபவர்கள் வேறுபிரதேசங்களுக்கு அல்லது மேலைத்தேச நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும். இந்நிலைமை தொடர்ந்தால் பல்வேறு மட்ட உத்தியோகத்தர்களின்; பற்றாக்குறையுடன் இயங்கும் வைத்தியசேவை மேலும் பாதிப்படையும். இது தவிர மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களைப் புகுத்தி முரண்பாடான நோயாளர் சேவையை உருவாக்கும் அபாயமும் காணப்படுகிறது.

அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஒரு சில ஊடகங்களில் ஊடகதர்மத்திற்க்கு அப்பால் வைத்திய சேவை விமர்சிக்கப்பட்டமையானது மிகவும் கவலைக்குரியது. ஓருவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் உரிய நிறுவனங்களுக்கு அறிவித்து பரிகாரத்தை தேடமுடியும் அல்லது உரிய சேவை கிடைக்காவிட்டால் முறையிட பல்வேறு வழிகள் காணப்படுகின்றது. குறிப்பாக பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களை நாடி தங்கள் பிரச்சினைகளை கூற முடியும்.

அரச வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளை கட்டுப்படுத்த முடியாது. இந்த பிரதேசம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இருந்தும் சில சமயம் வெளிநாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கு கூட சிகிச்சை அளிக்கின்றோம். பல்வேறு விடுதிகளிலும் கடமையாற்றும் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனேகமான நேரங்களில் தங்களுடைய வேலையின் அளவுக்கு அப்பால் கடமையாற்ற வேண்டியுள்ளது. இது பலருக்கு நன்றாகத் தெரியும். இவை சரியான முறையில் வெளியில் கொண்டு வரப்படுவதில்லை. ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற குறைபாட்டை பெரிதாக்கி பொதுமக்கள் ஏளனமாக பார்க்கக்கூடிய வகையில் விமர்சிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எப்போதும் எம்மால் ஏற்றுக் கொள்ளப்படும்.

தற்போது வெளிவருகின்ற செய்திகளும் விமர்சனங்களும் அநேகமான உத்தியோகத்தர்களை புண்படுத்துவதோடு அவர்களின் கடமைகளைச் செய்ய தடுக்கும் அபாயமும் காணப்படுகிறது. உதாரணமாக சில வைத்தியர்கள் சில விசேட சிகிச்சைகளை செய்ய தயங்குவார்கள். இது இப்பகுதி வாழ் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் நல்ல சிகிச்சையை வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பது வரவேற்க்கத்தக்கது. ஆனால் எம்மால் மேலைத்தேச நாடுகள் போன்ற வசதிகளைக் கொண்ட சிகிச்சையை வழங்க முடியாதுள்ளது. ஆனால் தரமான பாதுகாப்பான சிகிச்சையை எப்போதும் வழங்குவதில் நாம் அவதானமாக இருக்கின்றோம். இதை இங்குள்ளவர்களும் உணர வேண்டும்.

அண்மையில் கண் சத்திரசிகிச்சை நிபுணர் மலரவன் பற்றி ஒரு சிலர் நெறிமுறைகளைக் கடந்து செய்திகளை வெளிட்டனர். இது அவரை மாரத்திம் அல்ல ஏனைய வைத்தியர்களையும் கடுமையாக புண்படுத்தி விட்டது.

வைத்திய நிபுணர் மலரவன் கடந்த 5 வருடங்களாக வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றார். இக்காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் 10955 கற்றாக் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இது தவிரவும் கண்ணோடு சம்மந்தப்பட்ட பல்வேறு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

காலை 8.00 மணிக்கு முன்னரே கடமைக்கு வரும் வைத்திய நிபுணர் மலரவன், சத்திர சிகிச்சை நாள்களில் மதிய நேர உணவை ஒரு போதும் எடுத்தது இல்லை. சில நாள்களில் சத்திர சிகிச்சை இரவு நேரம் வரை நீடிக்கும்.

இவர் மேற்கொண்ட கற்றாக் சத்திர சிகிச்சைகள் மிகவும் சவாலானவை. இவற்றில் 1378 கற்றாக் சத்திர சிகிச்சைகளை பொது மயக்கமருந்து வழங்கி செய்துள்ளார். இது தவிரவும் பல்வேறு நோய்களுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் ஏனைய வைத்திய நிபுணர்களின் சிகிச்சையைச் சரி செய்து கண் சத்திர சிகிச்சை செய்துள்ளார்.

வைத்திய நிபுணர் மலரவன் கண் சிகிச்சை கிளினிக் மற்றும் கண் சத்திர சிகிச்சை விடுதியின் வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டுபவர். வைத்தியசாலை நிர்வாகத்தோடும் தொடர்பு கொண்டு கண் சிகிச்சை வசதிக்காக பாடுபட்டவர். அவர் சிகிச்சை பெறும் அனைவரிடமும் அதிக அக்கறை கொண்டவர். விடுதியில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் கிளினிக் இற்கு வரும் எல்லா நோயாளிகளையும் மிகுந்த அவதானத்துடன் பார்வையிடுவார். எப்போதம் அவர்களுக்கு கவனமாக சிசிச்சை அளிப்பார்.

வட மாகாணத்தில் ஏனைய பொது வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் நிரந்தரமாகக் கடமையாற்றுவதில்லை. ஆகவே அம்மாவட்டங்களுடைய கற்றாக் நோயாளிகளும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே சிகிச்சை பெற வருகின்றார்கள். அதற்காக விசேட சத்திர சிகிச்சை நாள்களை அறிவித்து அவர்களுக்கு கண் சத்திரசிகிச்சை செய்திருக்கின்றார். இது மாத்திரமல்லாமல் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் இருந்தும் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருபவர்களுக்கு போதியளவு சிகிச்சையை வழங்கி வருகின்றார்.

அண்மையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை செய்யப்பட்டவர்கள் கண்ணில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு எமது வைத்தியசாலையில் வழங்கப்பட வேண்டிய அனைத்து வித சிகிச்சைகளையும் வழங்கி வருகின்றோம். எமது வைத்தியசாலையில் இவ்வாறான தொற்று கடந்த காலங்களில் ஏற்;படவில்லை. இருப்பினும் எதிர் வரும் காலங்களில் மிகவும் அவதானமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

மருத்துவ உலகைப் பொறுத்த வரையில் இவ்வாறான திடீர் சம்பவங்கள் சவாலானவையாக இருந்து வருகின்றன. இவ்வாறான திடீர் சம்பவங்கள் விஞ்ஞான ரீதியாக ஆராயப்பட்டு தடுக்கப்பட வேண்டும். அத்துடன் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய பரிகாரம் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பது பொருத்தமாகும். மாறாக தனிப்பட்டவர்கள் மீது பல்வேறு அவதூறுகளையும் குற்றங்களையும் சுமத்துவதை உடனடியாக நிறுத்திக்  கொள்ளவேண்டும்.

வைத்திய நிபுணரான மலரவன் மீது வெளிநாடு ஒன்றில் வசிக்கும் இருவர் காணொலி மூலமாக அவதூறு காட்சியை வெளியிட்டு அவருடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்ப்படுத்த முயற்ச்சித்துள்ளனர். அத்துடன் இப்பகுதியில் இருக்கும் ஏனைய உத்தியோகத்தர்களை பயமுறுத்தியுமுள்ளனர். இது விடயமாக குற்ற விசாணைப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்கள் வாழும் நாட்டின் பாதுகாப்புத் தரப்பினருக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இப்பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு எடுத்துச் செல்லப்படும் செய்திகள் பற்றி நாம் கரிசனையாக இருக்க வேண்டும். சில சமயங்களில் உண்மையான தகவல்கள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை. இதனால் பொது மக்களிடையே கருத்து முரண்;பாடுகள் ஏற்பட்டு சேவை பாதிப்பு ஏற்படும். ஆகவே உன்னதமான மருத்துவ சேவை பற்றி மக்களுக்கு உண்மை நிலை கொண்டு செல்லப்படவேண்டும்.

பணிப்பாளர் – யாழ் போதனா வைத்தியசாலை

நன்றி

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

1 comment

bithushan November 3, 2017 - 3:20 pm

thank u for your clarification sir.. because i know very well about Mr . Malaravan duty responsibility and friendly manner.. Dr. Malaravan one of the gift of Jaffna Teaching hospital

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More