குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தவறான சிகிச்சை முறை தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்து நீதிமன்றை நாடி நீதியை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் மாலை ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதன் போது அண்மையில் நொதேர்ன் வைத்திய சாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது ஏற்பட்ட கிருமி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் கேட்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
குறித்த சத்திர சிகிச்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யா.போதனா வைத்திய சாலையில் தொடர்ந்து உரிய சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அவர்களுடைய கண் பார்வை தொடர்பிலான எந்தவிதமான அறிக்கைகளும் இன்னமும் கிடைக்க பெறவில்லை.அவர்களுக்கு என்ன விதமான விளைவுகள் ஏற்படும் என்பது கூட தற்போது கூற முடியாது. அவர்கள் கடுமையான கிருமி தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் இருவர் சிகிச்சையின் பின்னர் திருப்பி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளானர். மூவர் தொடர்ந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை பாதிக்கபப்ட்டவர்களுக்கு பரிகாரம் வழங்கப்பட்டே ஆக வேண்டும். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குறித்த தனியார் மருத்துவ மனைக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
அத்துடன் தவறான சிகிச்சை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். அதனூடாக நீதிமன்றை நாடி பாதிக்கப்பட்வர்கள் நீதியை பெற்றுக்கொள்ள முடியும். என மேலும் தெரிவித்தார்.
அண்மையில் யாழில் உள்ள நொதேர்ன் வைத்தியசாலையில் கற்ராக் சத்திர சிகிச்சை மேற்கொண்ட ஒன்பது பேருக்கு கண்ணில் கிருமி தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு ஒரு கண்ணின் பார்வை முற்றாக பறிபோன நிலையில் கிருமி தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தமையால் ஒரு கண் அகற்றப்பட்டு உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.