மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியை சமன் செய்ததன் மூலம், 12 வருடத்திற்குப் பின்னர் ஜிம்பாப்வே அணி தோல்வியை தவிர்த்துள்ளது . கடந்த 29ம் திகதி புலவாயோவில் ஆரம்பமான 2வது டெஸ் போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே 326 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 448 ஓட்டங்களைப் பெற்றது. 2-வது இன்னிங்சை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்தநிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்ற நிலையில் ஜிம்பாப்வே அணி 144 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 301 ஓட்டங்கள் எடுத்திருந்த போது போட்டியை முடித்துக் கொள்ள இரண்டு அணி தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதனால் ஆட்டம் சமனிலையில் முடிவுக்கு வந்தது.
இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 12 வருடத்திற்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.