குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் அண்மையில் ஆலயம் ஒன்றின் அன்னதான மண்டபம் அமைக்க ஜந்து இலட்சத்து இருபதாயிரத்து 650 ரூபாவை பொதுச் சபையினதோ, அல்லது கூட்டுறவுத் திணைக்களத்தினதோ அனுமதியின்றியே சட்டத்திற்கு புறம்பாக அன்பளிப்புச் செய்தது என கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி நல்லதம்பி தெரிவித்துள்ளார்.
பொதுசபையின் அனுமதியுடன் நிதியை அன்பளிப்புச் செய்ததாக நிர்வாகம் தவறான தகவலை தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதி புதிய நிர்வாகத் தெரிவுக்காக கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச் சபை கூட்டம் நடந்தது.
இதன் போது புதிய நிர்வாகத் தெரிவும், பணியாளர் நலத் திட்ட நிதி தொடர்பிலான குழு அமைத்தல் ஆகிய விடயங்கள் மாத்திரமே இடம்பெற்றது. ஏனைய எந்த நிகழ்ச்சி நிரலும் குறித்த பொதுக் கூட்டத்தில் இடம்பெறவில்லை. அதற்கு பின்னரும் பொதுக் கூட்டம் இடம்பெறவில்லை
இந்த நிலையில் கடந்த 09 -10 2017 அன்று ஆலயம் ஒன்றுக்கு அன்னதான மண்டபம் அமைக்க நிதி வழங்கியது பொதுச் சபையின் அனுமதியுடன் என்பது உண்மைக்கு புறம்பானது எனத் தெரிவித்த கூட்டுறவு உதவி ஆணையாளர் திருமதி நல்லதம்பி, சங்கம் இவ்வளவு பெரிய தொகை நிதியை அன்பளிப்புச் செய்வதாக இருந்தால் இயக்குநர் சபை , பொதுச் சபை, அனுமதிகளுடன், எங்களின் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஊடாக மாகாண கூட்டுறவு ஆணையாளரின் அனுமதி பெறப்படவேண்டும் ஆனால் இவை எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த செம்ரெம்பர் மாதம் 23 ஆம் திகதி பின்னர் கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தில் பொதுச் சபை கூட்டம் இடம்பெறவில்லை என்பதனை சங்கத்திற்கு பொறுப்பான கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தரும் உறுதிப்படுத்தினார்