Home இலங்கை நியாயமான சந்தேகம் – பி.மாணிக்கவாசகம்

நியாயமான சந்தேகம் – பி.மாணிக்கவாசகம்

by admin

இடைக்கால அறிக்கை தொடர்பிலான விவாதம் இனப்பிரச்சினை தீர்வுக்கான அரசியல் வரலாற்றில் அதிமுக்கிய நிகழ்வாகப் பதிவாகியிருக்கின்றது. ஆனால், தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத்தக்கதொரு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு, அது வழி வகுக்குமா என்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கேள்விக்குறியாகியிருக்கின்றது.

மூன்று தினங்களுக்கு நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த இந்த விவாதம் 5 ஆம் திகதி வரையில் மேலும் இரண்டு தினங்களுக்கு நீடிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், புதிய அரசியலமைப்பின் உள்ளடக்கம் பற்றிய முரண் நிலைகளைக் களைவதற்கு அவசியமான ஆரோக்கியமான கருத்துக்களிலும் பார்க்க, முரண்பாடுகளை அதிகரிக்கச் செய்வதற்கான கருத்துக்களே அதிகமாக இந்த விவாதத்தில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதனால், இந்த விவாதத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு முடிவு காணத்தக்கதோர் அரசியலமைப்பை உருவாக்க முடியாமல் போய்விடுமோ என்ற நியாயமான சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருப்பதைக் காண முடிகின்றது.

புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாட்டின் ஆட்சி முறை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது முக்கியமாகும். நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சியின் கீழ் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அதன் கீழ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதும் சாத்தியமற்றது என்ற கசப்பான உண்மை ஏற்கனவே உணர்த்தப்பட்டிருக்கின்றது. இதுவரையிலான ஆட்சிப் போக்கு அந்த கசப்பான அரசியல் வரலாற்றுப் பாடத்தைத் தமிழ் மக்களுக்குத் தெளிவாகக் கற்பித்திருக்கின்றது.

அவநம்பிக்கையும் அடக்குமுறையும்

மத்தியில் அதிகாரங்களைக் குவிப்பதற்கும், தேசிய சிறுபான்மை இன மக்களை ஆட்சி அதிகாரங்களற்ற இனக்குழுமங்களாக அடையாளப்படுத்துவதற்குமே இந்த நாட்டின் ஒற்றை ஆட்சி முறைமை இதுவரையில் வழிவகுத்திருக்கின்றது.

இங்கு பல இனங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். அவர்கள் பல்வேறு மதங்களைப் பின்பற்றுகின்றார்கள். பல்லின மக்களையும் பல மதங்களைச் சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து அவர்கள் ஒற்றுமையாகவும். நல்லிணக்கத்தோடும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த ஒற்றை ஆட்சி முறையின் அரச நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை. யாவரும் இந் நாட்டு மக்கள். அவர்கள் அனைவரும் சம உரிமை உடையவர்கள். சம அளவிலான உரித்துக்களைக் கொண்டவர்கள் என்ற உணர்வுடன் வாழக்கூடிய சூழலை இந்த ஒற்றை ஆட்சியின் மூலம் உருவாக்க முடியவில்லை.

மாறாக இந்த நாடு சிங்கள மக்களுக்கே உரியது. அனைத்து உரிமைகளும் அவர்களுக்கே உரியது. ஏனையோர் ஒதுக்கப்பட வேண்டியவர்கள், அல்லது ஒடுக்கப்பட வேண்டியவர்கள் என்ற அரசியல் கொள்கையின் அடிப்படையிலேயே ஒற்றை ஆட்சி முறை தனது அரசியல் பயணத்தை  மேற்கொண்டு வந்துள்ளது.

அரசியல் தீர்வுக்காக தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட தீர்க்கமான அஹிம்சைப் போராட்டம் வெற்றியளிக்கவில்லை. ஆட்சியாளர்களினால் எள்ளி நகையாடி புறந்தள்ளப்பட்டது. அதனால், அவநம்பிக்கையையே அது அளித்திருந்தது. அந்த அவநம்பிக்கையும், அஹிம்சை போராட்டத்தை நசுக்குவதற்காக அரசுகள் மேற்கொண்ட ஆயுத முனையிலான அடக்குமுறை போக்குமே, தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்தில் குதிக்கத் தூண்டியிருந்தது.

ஆட்சி மாற்றமும் அரசியலமைப்பு உருவாக்க முயற்சியும்

அரசுகளை ஆட்டம் காணச் செய்திருந்த அந்த ஆயுதப் போராட்டமும், பயங்கரவாதம் என்ற போர்வையில் அனைத்துலக நாடுகளின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது. ஆனால் போராட்டத்திற்கு அடிப்படையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு யுத்தத்தில் வெற்றிபெற்ற அரசாங்கம் முன்வரவில்லை. மாறாக ஜனநாயகப் போர்வையில் மென்போக்கிலான வன்முறையின் மூலம், தமிழ் மக்களின் உரிமைக்கான குரல்களை நசுக்குவதற்காக இராணுவ மயப்பட்ட நடவடிக்கைகளையே அது மேற்கொண்டிருந்தது.

மறுபக்கத்தில் இராணுவ வெற்றிவாதத்தில் சிங்கள மக்களை மூழ்கச் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனக்கென நிரந்தரமான அரசியல் வாழ்வுக்கு வழிகோல முற்பட்டார். இராணுவ மயப்பட்ட அவருடைய அரசியல் நடவடிக்கைகளில் ஜனநாயகம் நசுக்கப்பட்டது. ஏதேச்சதிகாரப் போக்கு தலைதூக்கியது. இதனால் ஜனநாயகத்தைப் பாதுகாத்து அதற்குப் புத்துயிர் ஊட்டுவதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உருவாகியது.

ஜனநாயகத்தை அச்சுறுத்திய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துக்கு சவாலான விகிதாசார தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்ற இரண்டு முக்கிய நோக்கங்களுக்காகவே புதிய அரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சி அசராங்கம் முற்பட்டிருந்தது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உறுதுணை புரிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பு விரும்பியவாறு புதிய அரசியலமைப்பின் மூலம் அதிகாரங்களைப் பகிர்ந்து, இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் இணங்கியிருந்தது. இதன் அடிப்படையிலேயே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஒத்துழைப்போடு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

முயற்சிகள் இதய சுத்தியானவையா…..?

இருப்பினும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள், இதய சுத்தியுடன் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. ஒற்றை ஆட்சியை மேலும் இறுக்கமாக்கி, அதனை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிமுறையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

நடைமுறையில் உள்ள ஒற்றை ஆட்சி முறையில் மாற்றமில்லை. பெரும்பான்மையினராகிய பௌத்த சிங்கள மக்களை முதன்மைப்படுத்துவதற்காக, பௌத்த மதத்திற்கே முன்னுரிமை – மேலாதிக்க நிலைமை என்ற அம்சம் முன்னிலும்பார்க்க, வலுவாக, புதிய அரசியலமைப்புக்கான அடிப்படைக் கொள்கையில் வரையறை செய்யப்படுகின்றது. ஏக்கிய ராஜ்ஜிய என்ற ஒற்றையாட்சி முறையும், பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதும், ஏனைய தேசிய சிறுபான்மை இன மக்களை, தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதற்கான அடிப்படை அரசியல் நிலைப்பாடு என்பதை அரச தரப்பினருடைய கூற்றுக்கள் தெளிவாக வெளிப்படுத்தி வருகின்றன.

வரலாற்று ரீதியான தேசிய இனமாக தமிழ் மக்களைச் சுட்டிக்காட்டி, அவர்களது தாயகப் பிரதேசம் என்ற காரணத்திற்காக வடக்கும் கிழக்கும் இணைந்த, பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையுடன் கூடிய, சுயநிர்ணய உரிமையைக் கொண்ட சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வே வேண்டும் என்று வலியுறுத்துகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பிரதிநிதிகள், அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்புக்கான இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதுதான் வேடிக்கையானது. அதேநேரத்தில் அது, விபரீதமானதும், வேதனைக்கும் உரியதாகும்.

ஒற்றை ஆட்சி என்பதையும், பௌத்த மதத்திற்கே மேன்மையான இடம் என்பதையும் சம்பந்தனும், சுமந்திரனும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசுகையில் தெரிவித்திருக்கின்றார். அரசியலமைப்புக்கான அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டுள்ள நாடாளுமன்ற அவையில் அமர்ந்திருந்த அவர்கள் இருவரையும் சுட்டிக்காட்டி அவர் இதனைக் கூறியிருக்கின்றார். அவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொண்டதன் பின்னர் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என்ற தொனியில் அவருடைய கருத்து அமைந்திருந்ததாகவே கொள்ள வேண்டும்.

சம்பந்தன் இந்த நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கும் அப்பால், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர், தமிழ் மக்களின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்றப் பிரதிநிதி. சுமந்திரன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அதிகாரபூர்வ பேச்சாளர். யாழ் மாவட்ட தமிழ் மக்களால் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி. அது மட்டுமல்ல. அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் தமிழ் மக்களுடைய ஏகப் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்துடையவர்கள். எனவே, இவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற கருத்துக்களும், இவர்களால் வெளிப்படுத்தப்படுகின்ற நிலைப்பாடுகளும் தமிழ் மக்களுடைய கருத்துக்களாகவும், தமிழ் மக்களுடைய நிலைப்பாடாகவுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

அடிப்படை என்ன?

இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய சுமந்திரன், பௌத்த மதத்திற்கு எதிர்ப்பில்லை என கூறியிருக்கின்றார். அவர் மட்டுமல்ல. பௌத்த மதத்தை தமிழ் மக்கள் எவருமே எதிர்க்கவில்லை. பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் மேன்மையான இடம் வழங்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதைத்தான் அவர்கள் எதிர்க்கின்றார்கள். அரசியலமைப்பு விடயத்தில் இது முக்கியமானதொரு பிரச்சினையாகும்.

ஆனால் சுமந்திரன் தனது உரையில், ‘நாங்கள் இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும் சமமாகவே மதிக்கின்றோம். அனைத்துக்கும் சம அந்தஸ்து வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது கோரிக்கையாகவுள்ளது. இருப்பினும் பெரும்பான்மையான பௌத்த மதத்தினை பின்பற்றும் மக்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் அல்லது தற்போதுள்ளமையைப்போன்றே புதிய அரசியலமைப்பிலும் அமையவேண்டும் என்று விரும்புவார்களாயின் அதனை நாம் எதிர்க்கப் போவதில்லை. அதனால் எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை’ என குறிப்பிட்டிருக்கின்றார். இதன் மூலம் தமிழ் மக்களுக்குப் பிரச்சினையாக உள்ள முக்கிய விடயத்தை அவர் ‘எமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை’ என்று வரையறுத்திருக்கின்றார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன்பே தமிழ்ப்பிரதேசங்களில் அரசியல் ரீதியாக இராணுவத்தினருடைய துணையோடு பௌத்த மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து ஆலயங்கள் கிறிஸ்தவ ஆலயங்கள் அமைந்துள்ள காணிகளிலும், அவற்றுக்கு அருகிலும் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற மக்கள் எவருமே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. அடாத்தாக பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் தமிழ் மக்களுடைய மத உரிமைகளை அப்பட்டமாக மீறுகின்ற நடவடிக்கைகளாகும். இத்தகைய ஒரு சூழலில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை நாம் எதிர்க்கப் போவதில்லை என தமிழ் மக்களுடைய சார்பில் உரையாற்றிய சுமந்திரன் எந்த அடிப்படையில் கூறியிருக்கின்றார் என்பது தெரியவில்லை.

அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும். அனைத்து மதங்களும் சமமான உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மதச்சார்பற்ற ஆட்சி முறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே, இந்து, கிஸ்தவ, இஸ்லாமியர்களான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அரசியல் ரீதியாக ஏற்கனவே மேலாதிக்க நிலையைக் கொண்டுள்ள பௌத்தர்களின் மத ரீதியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளினாலும், மத ரீதியான வன்முறைகளினாலும் அவர்கள் நொந்து நூலாகிப் போயிருக்கின்றார்கள். ஆயினும் அந்தப் பிரச்சினைகளுக்கு இன்னும் முடிவேற்படவில்லை. அத்துமீறல்களாகவும், அச்சுறுத்தல்களாகவும், வன்முறைகளாகவும் பௌத்த மத ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. இந்த நிலையில் எந்தவிதமான நிபந்தனைகளுமின்றி, பௌத்தத்திற்கு முன்னுரிமை என்ற அரசியலமைப்புக்கான அடிப்படை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வது என்பது நேர் முரணான நிலைப்பாடாகும்.

பிரிக்கப்படமுடியாத, பிரிக்கப்படக்கூடாத, ஒருமித்தநாடு – ஏக்கியராஜ்ஜிய

இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணத் தவறியது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக தேசிய சிறுபான்மை இன மக்களுடைய உரிமைகளைக் கபளீகரம் செய்து வந்த ஆட்சியாளர்களின் போக்கு காரணமாகவே தமிழர்கள் தனிநாடு கோரி போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஆனால், அஹிம்சை வழியிலும், ஆயுதமேந்தியும் நடத்தப்பட்ட போராட்டங்களின் அழுத்தத்தில் இருந்து மீண்டு எழுந்துள்ள அரச தரப்பினர், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சுதந்திர காற்றையே சுவாசித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், அரசியல் ரீதியாக அழுத்தத்தைப் பிரயோகிக்கத்தக்க ஆளுமையுள்ள அரசியல் வலுவில்லாதவர்களாகவே தமிழ் மக்களை ஆளும் தரப்பினர் நோக்குகின்றார்கள். தமிழ் மக்களுiடைய அரசியல் கள நிலைமையும் அவ்வாறே காணப்படுகின்றது.

அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க வல்ல அரசியல் பலம் தமிழ் மக்களுக்கு இருக்குமேயானால், இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிப்பிரச்சினை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை என தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டிருக்கமாட்டாது. பாதிக்கப்பட்டவர்களே, அரசியல் தலைமைகளின்றி சுயமாக மேற்கொள்கின்ற போராட்டங்களின்போது, சாதாரண அரசியல்வாதிகளில் இருந்து, துறை சார்ந்த அமைச்சர்கள் மட்டுமல்லாமல், நாட்டுத் தலைவர்களான பிரதமர் ஜனாதிபதி வரையில் அரச தரப்பினரால் அளிக்கப்படுகின்ற உறுதிமொழிகளும் நிறைவேற்றப்படாமல் காற்றில் கரைந்து கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் பலமற்றிருப்பதே இதற்குக் காரணமாகும்.

யுத்த மோதல்களின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மனிதாபிமான சட்டமீறல்களுக்கான பொறுப்பு கூறுகின்ற பாரிய பிரச்சினை மட்டுமல்லாமல், சின்னச் சின்ன பிரச்சினைகளுக்குக் கூட ஐநா மன்றத்தையும் சர்வதேசத்தையும் உதவிக்கு அழைக்கின்ற அரசியல் மனப்பாங்கு தமிழ் மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களுக்கான முறையான அரசியல் பலம் வளர்க்கப்பட்டிருக்குமேயானால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகப் பிறரில் தங்கியிருக்கின்ற இந்த நிலைமை மலைபோல வளர்ந்திருக்கமாட்டாது.

 

ஏனோ தானோ என்று செயற்பட முடியாது

எதேச்சதிகாரப் போக்கைக் கொண்டிருந்த முன்னைய ஆட்சியில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட அரசியல் தீர்வுக்கான நேரடிப் பேச்சுவார்த்தைகள் தன்னிச்சையாக அரசாங்கத்தினால் முறிக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சி என்ற முக்கியமான அரசியல் அந்தஸ்தைப் பெற்றிருக்கின்ற சூழலில், நல்லாட்சி அரசாங்கத்திற்கு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முழுமையான ஆதரவை வழங்கி அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. ஆயினும் அரசியல் தீர்வுக்காக அரசாங்கத்துடன் ஒரு நேரடி பேச்சுவார்த்தையை நடத்த முடியாத நிலையிலேயே கூட்டமைப்பின் தலைமை காணப்படுகின்றது.

ஒரு நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போயிருந்தாலும்கூட, அல்லது அத்தகைய சந்தர்ப்பத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் உருவாக்கிக் கொள்ள முடியாமல் போயிருந்தாலும்கூட, புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஆக்கபூர்வமான முறையில் செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் பொதுவான எதிர்பார்ப்பாகும்.

அடிப்படை விடயங்கள் தொடக்கம் அநேகமாக அனைத்து விடயங்களிலும் முரண்பாடான நிலைமைகளே காணப்படுகின்றன. இருப்பினும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதன் ஊடாக ஓர் அரசியல் தீர்வை எட்டுவதற்கான முயற்சியைக் கைவிட முடியாது. அல்லது அதில் ஏனோ தானோ என்று செயற்படவோ முடியாது.

எதற்கெடுத்தாலும் ஐநாவிடம் முறையிடுவோம். சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவோம் என்று பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பிறரில் தங்கியிருக்கின்ற நிலையில் அரசியலமைப்பு விடயத்தில் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படவும் கூடாது. ஏனெனில் தமிழ் மக்களுடைய பங்களிப்பையும் உள்ளடக்கியதாகவே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்ற அந்தஸ்தில் இரா.சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் சுமந்திரனும் தமிழ் மக்களின் சார்பில் அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் முக்கிய பிரதிநிதிகளாக இடம்பெற்றிருக்கின்றார்கள்.

பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடாது

எனவே, உரிய சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்கள், நிலைப்பாடுகள் என்பவற்றை அழுத்தமாக எடுத்துக்கூறி அவற்றையும் உள்ளடக்குவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஈடுபட வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்திற்கு, அரசியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஏனைய அரசியல் விடயங்களில் கைக்கொள்கின்ற விட்டுக் கொடுத்துச் செயற்படுகின்ற மென்வழிப் போக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நன்மையளிக்க மாட்டாது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாகக் கையாள்கின்ற வாய்ப்பு வழிநடத்தல் குழுவில் இடம்பெற்றுள்ள தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளுக்கு கிட்டியிருக்கின்றது. எங்களுடைய பிரச்சினைக்கு நாங்களே தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்று அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியம்.

எழுந்தமானமாக கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர், தீர்வுக்காக அரச தரப்பினர் முன்வைக்கின்ற முடிவை மக்களிடம் கொண்டு சென்று எங்களால் எதையும் செய்ய முடியவில்லை என்று கூறுவதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமது தலைவர்களை அரசியல் களத்திற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய அரங்குகளுக்கும் அனுப்புகின்றார்கள்.

எனவே பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக உறுதியாகச் செயற்படத் தவறினால், மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More