வடமாகாண சபையினால் இதுவரை கால பகுதியில் 29 நியதி சட்டங்களை உருவாக்கி உள்ளோம் என அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 109ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபை எதுவுமே செய்யவில்லை என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. அண்மையில் யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வடமாகாண சபையினால் ஒரு நியதி சட்டம் கூட இயற்ற முடியவில்லை என குறிப்பிட்டு கட்டுரை எழுதி உள்ளனர். ஆனால் வடமாகாண சபையினால் இதுவரையில் 29 நியதி சட்டங்களை உருவாக்கியுள்ளோம். அந்நிலையில் பொய்யான தகவல்களை கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளனர்.
பல தடவைகள் மாகாண சபைக்கு வரும் நிதி திரும்பி போகவில்லை என கூறியுள்ள போதிலும் திரும்ப திரும்ப வடமாகாண சபைக்கு வரும் நிதி செலவு செய்யப்படாததால் திரும்புகின்றன என எழுதுகிறார்கள்.
ஊடகங்களில் வெளிவரும் செய்திகளுக்கு செய்தி ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். செய்தியாளர்கள் தான் போதிய விளக்கம் இல்லாமல் எழுதி கொடுத்தாலும் அதனை செய்தி ஆசிரியர்கள் சரி பார்க்க வேண்டும். ஆனால் செய்தி ஆசிரியர்களும் அதனை செய்ய வதில்லை.
மாகாண சபை ஒரு நியதி சட்டத்தையும் உருவாக்கவில்லை என கட்டுரை வெளியிட்ட பத்திரிக்கைக்கு சபையினால் தெளிவு படுத்தி குறித்த பத்திரிகை ஆசிரியருக்கு கடிதம் அனுப்பவுள்ளோம். என தெரிவித்தார்.