குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பரிஸ் காலநிலை உடன்படிக்கையில் சிரியாவும் கையொப்பமிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும், சிரியாவும் காலநிலை உடன்படிக்கையில் கைச்சாத்திட மறுப்பு தெரிவித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், தற்பொழுது சிரியா பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், அமெரிக்கா தனிமைப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.
2015ம் ஆண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது சிரியாவும் நிக்கரகுவாவேவும் கைச்சாத்திட மறுத்திருந்தன. பின்னர் நிக்கரகுவா உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது. எனினும், ஜூன் மாதம் இந்த உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. உடன்படிக்கையின் அடிப்படையில் 2020ம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வாறு உடன்படிக்கையிலிருந்து விலகிக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் பாரிஸில் நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.