வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு சூரிச் சிவன் கோவிலின் அன்பேசிவம் அமைப்பால் வரப்புயர மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கின் முன்னாள் விவசாய அமைச்சரும் மாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசன் நேற்றுச் செவ்வாய்க்கிழமை முகமாலையில் சம்பிரதாயபூர்வமாக இம்மரநடுகையை ஆரம்பித்து வைத்துள்ளார்.
சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சூரிச் சிவன் ஆலயத்தின் அன்பேசிவம் அமைப்பு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கெங்கும் பல்வேறு சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே வரப்புயர என்ற பெயரில் மரநடுகைத் திட்டத்தையும் செயற்படுத்தி வருகிறது.
வடக்கு மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் இம்மரநடுகை அன்பேசிவம் அமைப்பின் தொண்டர்களால் மேற்கொள்ளப்படுகிறது. ,தன் தொடர்ச்சியாகவே நடப்பு ஆண்டுக்கான மரநடுகை முகமாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முகமாலை கண்டி வீதியில் அன்பேசிவம் அமைப்பால் அண்மையில் எட்டு ஏக்கர் அளவான காணி கொள்வனவு செய்யப்பட்டு அதற்குச் சிவபுரம் வளாகம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியோர் இல்லம் மற்றும் கலாச்சார மண்டபம் அமையவுள்ள இந்த வளாகத்திலேயே மரநடுகை இடம்பெற்றுள்ளது. இதன்போது பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு 200 தென்னங்கன்றுகளை நாட்டிவைத்துள்ளனர். சிவபுரம் வளாகத்திலும் அதனை அண்டியுள்ள கண்டி வீதியிலும் தொடர்ந்து மரநடுகை இடம்பெறவுள்ளதாக அன்பேசிவம் அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மரநடுகை நிகழ்ச்சியில் அன்பேசிவம் அமைப்பின் இலங்கைக்கான தலைவர் அ.அருளானந்தசோதி, பிரதம நிறைவேற்று அதிகாரி கு.குமணன், செயலாளர் தில்லையம்பலம் வரதன், உபசெயலாளர் வே.செல்வகுமார், வல்லை ந.அனந்தராஜ், பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். பங்கேற்ற பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பழமரக் கன்றுகளும் கற்றல் உபகரணங்களும் அன்பேசிவம் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.