இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசு காரணமாக கடந்த மூன்று நாட்களாக இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காற்று மாசு பனிமூட்டம் போல காணப்படுவதால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கரமான விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.
காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) இன்று 484 ஆக உள்ளதாக இந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளிலும் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முன்பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கக்கப்பட்டிருந்தது. அத்துடன் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோர், நிச்சயம் முகமூடி அணிந்து கொள்ள வேண்டுமென்றும் இந்திய தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதேவேளை புகையிரத மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் மூன்று நாட்களுக்கு புகை மூட்டம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.