குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென்னிந்திய திருச்சபையின் சொத்துக்களில் எமக்கு எவ்வித உரிமையும் இல்லை என அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையின் முன்னால் தலைவர் அருட்பணி பி.ஈனோக் புனிதராஜா தெரிவித்துள்ளார். கடந்த 27.10.2017 என திகதியிடப்பட்டு அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையின் செயலாளரிற்கு எழுதிய உத்தியோக பூர்வ கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது கடிதத்தின் மூன்றாவது பந்தியின் மூன்றாவது குறிப்பில் குறிப்பிடுகையில்,
‘த அமெரிக்கன் சிலோன் என்ற பதமானது ஜேடிசிஎஸ்ஐ யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்திற்குரியது. இது சொத்துக்களை பதிவு செய்வதற்கான பாராளுமன்ற பதிவு சட்டம் என்பதுடன் வர்த்தக முகாமைத்துவம் தொடர்பானது. எனவே இதற்குரிய சட்டவலு அமெரிக்கன் சிலோன் மிஷன் தென்னிந்திய திருச்சபையின் சொத்துக்கள், பராமரிப்பு, கொள்வனவுகளிற்காக உத்தியோகபூர்வ அலகு. இதனை நாம் உரிமை கோர முடியாது. அதன் சொத்துக்களில் எமக்குரிமை இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு ஜீலை 25ம் திகதி தென்னிந்திய திருச்சபையில் இருந்து வெளியேறி அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை என்ற அமைப்பொன்றை உருவாக்கி தென்னிந்திய திருச்சபையின் சொத்துக்கள், ஆயங்களை அவ்வமைப்பு பயன்படுத்தி வந்தது. தென்னிந்திய திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் இருந்த உடுவில் மகளீர் கல்லூரியின் முன்னால் அதிபரை குறித்த அமைப்பினர் தமது தேவைக்காக பயன்படுத்துவதற்காகவே கடந்த வருடம் புதிய அதிபர் நியமனம் தொடர்பில் சர்ச்சை ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இக்கடிதத்தினை வரைந்த அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையின் முன்னால் தலைவர் செயலாளரிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் பிரகாரம் தென்னிந்திய திருச்சபையின் சொத்துக்கள் மற்றும் அமெரிக்கள் இலங்கை மிஷனின் சொத்துக்கள் அனைத்தும் யாழ்ப்பாண அத்தியட்சாதீனத்திற்கு சொந்தமானவையே என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளார். அதன்படி மெரிக்கன் இலங்கை மிஷன் சொத்துக்களை தவறாக பயன்படுத்தவே மெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபை என்ற அமைப்பை உருவாக்கி பல சொத்துக்கள் இன்றும் ஆட்சி செய்யப்பட்டு வருகின்றமை தெளிவாவதாக தென்னிந்திய திருச்சபையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் அவரிடம் எமது செய்தியாளர் வினவியபோது,
மேற்குறித்த கடிதம் தன்னால் அனுப்பபட்டதே எனவும், அதில் குறிப்பிடபபட்ட விடயங்கள் அனைத்தும் உண்மையானதே எனவும் அவர் குறிப்பிட்டார்.மேலும் குறித்த திருச்சபையில் புதிதாக கொண்டுவரப்படும் யாப்பில் காணப்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டவே குறித்த கடிதம் தன்னால் அனுப்பி வைக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய யாப்பில் மேலும் சில விடயங்கள் காணப்படுவதாகவும் ஒரு தலைவரின் பதவிக்காலம் 2 வருடங்கள் எனவும் இரு தடவைகள் இருக்க முடியும் என பழைய யாப்பில் காணப்படும் நிலையில் தற்போது ஒரு தலைவரின் பதவிக்காலம் 5 வருடங்களாக நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிலும் அமெரிக்கன் இலங்கை மிஷன் திருச்சபையில் குருத்துவம் பெற்றவர்களே பதவி வகிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தென்னிந்திய திருச்சபையிலிருந்து இரு பிரிவுகளாக இருக்கின்றமை பொருத்தமற்றது என்பதை தான் இன்று நன்குணர்வதாகவும், பிரிவினைகள் இல்லாது ஒன்று சேர்வதே பொருத்தமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.