175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளூராட்சி தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
உள்ளூராட்சி சபை தேர்தலில் ஈ.பி.டி.பி தனித்து போட்டியிட உள்ளது.1998 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 சபைகள் பெற்றோம். பின்னர் ஐக்கிய முன்ணணியுடன் கூட்டு சேர்ந்து இணக்க அரசியலில் போட்டியிட்டோம்.இன்றைய சூழ்நிலையில் நாம் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளோம். நல்லாட்சி என சொல்லப்படும் இந்த அரசாங்கம் உலகில் பெரும் மோசடியான மத்திய வங்கி மோசடி செய்தவர்கள். அதனை ஜனாதிபதியே ஒப்புக்கொண்டு உள்ளார். அவ்வாறு செய்தவர்களுடன் கூட்டு சேர விரும்பவில்லை. அதனால் தனித்து போட்டியிடுகின்றோம்.ஆனாலும் மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எனும் கொள்கையில் மாற்றமில்லை.
வெள்ளத்தால் பாதிப்பு அதிகாரிகள் பாராமுகமாக செயற்படுகின்றனர் அரசியல்வாதிகள் கூட கண்டு கொள்ளவில்லை இவ்வாறான அரசியல்வாதிகளை உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.காணாமல் போனவர்கள் போராட்டங்கள் நீண்ட நாட்களாக நடக்கின்றது அதற்கு கூட தீர்வினை பெற்று தர கூட நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் முனையவில்லை.
யாழ்.பல்கலைகழக போராட்டம் இலக்கை அடையவில்லை. எதிர்பார்த்த வெற்றி அரசியல் கைதிகளுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகளின் பாராமுகம் ஆகும் நல்லாட்சி அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ் அரசியல்வாதிகள். காத்திரமான நடவடிக்கையை எடுக்கவில்லை. அவர்களை மக்கள் இனிவரும் காலங்களில் புறக்கணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை கூட்டமைப்பில் யாரும் சேரலாம். யாரும் வெளியேறலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்தமை தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது , கூட்டமைப்பு மக்களின் வாக்குகளை அபகரிக்க கூட்டு சேர்ந்தவர்கள். அவர்களிடம் எந்த கொள்கையும் இல்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணமும் இல்லாதவர்கள் அவர்களுடன் கூட்டு சேர்ந்து நாம் என்ன செய்ய முடியும். அவர்களுடன் கூட்டு சேர மாட்டோம்.
ஐநா வில் இங்கே நடந்தது இனப்படுகொலை இல்லை என சட்டத்தரணியாக கூறுவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கு அவர் சட்டத்தரணியாக போகவில்லை. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக தான் சென்றவர் இப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து என்ன செய்ய ? என மேலும் தெரிவித்தார்.
அதேவேளை மற்றுமொரு அமைப்பாளரான சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில்,ஏழை மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அவர்களுக்கு கிடைக்க இருந்த பொருத்து வீடுகளை தடுத்து நிறுத்திவயர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். இன்று அந்த மக்கள் வறுமையில் குடிசை வீடுகளில் வெள்ளத்தின் பாதிப்புடன் வாழ்கின்றனர் .அவர்களுக்கு அந்த வீடு கிடைத்து இருக்கனும் அதனை கூட்டமைப்பினரே தடுத்தனர். அதனை தடுத்து நிறுத்தியமை கண்டிக்கிறோம்.
அப்படிப்பட்ட கூட்டமைப்புடன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சேர்ந்து என்ன செய்வது ? அவர்கள் மக்களுக்கு எதனை செய்துள்ளனர் ? மக்களுக்கு சேவை செய்யும் நாங்கள் அவர்களுடன் இணைந்து என்ன செய்வது? அவர்களுடன் கூட்டு சேர மாட்டோம். என தெரிவித்தார்.
Spread the love