குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீதி புனரமைக்கப்படாததன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கிளிநொச்சி முக்கொம்பன் கிராமத்திற்கான பேரூந்து சேவைகள் இடம்பெறவில்லை. இதன் காரணமாக இக்கிராமத்தினைச் சேர்ந்த எழுநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி அக்கராயன் வழியாக முக்கொம்பன் கிராமம் செல்லும் பேரூந்து பணியினை மேற்கொண்ட நிலையில் கடந்த ஏழாண்டுகளாக ஸ்கந்தபுரம் கிராமத்திற்கும் முக்கொம்பன் கிராமத்திற்கும் இடையிலான நான்கு கிலோமீற்றர் வீதியினைப் புனரமைக்காததன் காரணமாக தற்போது பேரூந்து சேவைகள் இடம் பெறவில்லை.
இதன் காரணமாக முக்கொம்பன், நேரடம்பன், அரசபுரம், கண்ணகைபுரம், சின்னப்பல்லவராயன்கட்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
வீதியில் உள்ள பெருங்குழிகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதினால் பேரூந்து சேவைகள் இடம் பெறவில்லை. அக்கராயன் பிரதேச மருத்துவமனைக்குச் செல்லும் மக்களும் அக்கராயன் மகா வித்தியாலயத்திற்குச் செல்லும் மாணவர்களும் ஆசிரியர்களும் தற்போது போக்குவரத்து நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.
மேற்படி வீதியினைப் புனரமையுங்கள் என அதிகாரிகளிடமும் வடமாகாண சபை உறுப்பினர்களிடமும் குறிப்பாக வடமாகாண போக்குவரத்து அமைச்சிடமும் பல தடவைகள் மக்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டும் வீதி புனரமைக்கப்படவில்லை என்பதினால் தற்போது பேரூந்து சேவைகள் இடம் பெறாததனால் மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.