குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் புலோப்பளை பிரதான வீதி பல ஆண்டுகளாக புனரைமைக்கப்படாது இருப்பதனை சுட்டிக்காட்டியும் இதற்கான தீர்வினைக் கோரியும் அமைதிப்பேரணி ஒன்று மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
புலோப்பளை பிரதேச மக்கள் ,மற்றும் கிராம மட்ட அமைப்புக்கள் என்பன ஒன்றிணைந்து இவ் அமைதிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்
இன்று காலை நடைபெற்ற இப் பேரணியில் புலோப்பளையில் இருந்து அமைதியான முறையில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக வந்த மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளரிடம் கையளித்தனர்
இதன் போது கருத்துத் தெரிவித்த கிராம மக்கள் புலோப்பளைகிழக்கு, புலோப்பளை மேற்கு,அல்லிப்பளை,அறத்திநகர்,பளை மத்தி போன்ற கிராமங்களின் பிரதான வீதியாகவும் காற்றாலை, மிருக வைத்தியசாலை, தும்புத்தொழிற்சாலை,முன்பள்ளி,பாடசாலைகள் போன்ற முக்கிய இடங்களிற்கான பயன்பாட்டு வீதியாகவும் அமைந்துள்ளது.
பெரியபளை,கச்சார்வெளி,முல்லையடி,செல்வபுரம் போன்ற கிராமங்களின் உபவீதியாகவும் கடலுக்கான வீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றது.
பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தின் முக்கிய வீதியை இதுவரை ஏன் பாராதிருக்கிறார்கள் என்ற காரணம் புரியவில்லை. காற்றாலையிடமிருந்து வடமாகாணசபை பெறும் இடவாடகையை இப் பிரதான வீதிக்கு நினைத்திருந்தால் பயன்படுத்தியிருக்கலாமென்ற விடயத்தை கருத்தில் கொண்டு வருவதோடு பாடசாலை மாணவர்கள்,முதியவர்கள்,கர்ப்பிணித்தாய்மார்,உத்தியோகத்தரென அனைவருமே பல இன்னல்கள் மத்தியில் பயன்படுத்தும் இவ் வீதியை அரசியல் பிரமுகர்களே கட்சி பேதங்களின்றி செப்பனிட்டுத் தாருங்கள்,அரச உயரதிகாரிகளே கருத்தில் கொள்ளுங்கள்.அனர்த்தங்களானபின் ஆற்றும் உரைகள் வடிக்கும் நீலிக் கண்ணீர்கள் பயன்தரா ஆதலால் செயல்ப்பட முன்வாருங்கள் எனக் கேட்டுக் கொண்டனர்
இது தொடர்பில் மக்களுக்கு கருத்துத் தெரிவித்த பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ப.ஜெயராணி
குறித்த வீதி தொடர்பில் கடந்த கால அபிருத்திக் குழுக் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் இவ் வீதி. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதி என்பதால் அவர்களுடனும் பேசப்பட்டது இவ் வீதி புனரமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வருகின்ற வருட இறுதியில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என தெரிவித்தார்