குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:
கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள வர்த்தகர்கள் 87 பேருக்கு கரைச்சி பிரதேச சபை இறுதி அறிவித்தல் அனுப்பியுள்ளது. கனகபுரம் வீதியில் வீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அதனை இம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அகற்ற வேண்டும் எனவும் கோரியே இக் கடிதம் பிரதேச சபையினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதியானது முப்பது மீற்றர் அகலமுடையது. இரண்டு பக்கங்களிலும் உள்ள வியாபாரிகள் தங்களின் வியாபார நடவடிக்கைகளை வீதியின் மத்தியிலிருந்து 15 மீற்றர் சுமாா் 50 அடிக்கு அப்பால் மேற்கொள்ள வேண்டும் ஆனால் பெரும்பாலான வியாபாரிகள் வீதிக்கு மிக மிக அருகில் தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். சில வியாபார நிலையங்களில் வாகனங்களில் செல்கின்றவா்கள் தங்களுடைய வாகனங்களிலிருந்து இறங்காது வீதியில் நின்றபடியே பொருட்களை கொள்வனவு செய்யுமளவுக்கு வியாபார நிலையங்கள் காணப்படுகிறது. இது போக்குவரத்துக்கும், பொது மக்களும் பெரும் இடையூறாக இருப்பதோடு, வடிகாலமைப்பை மேற்கொள்ள முடியாத சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு எதிர்கால நகரின் திட்டமிடலுக்கும் அபிவிருத்திக்கும் பெரும் தடையாகவும் வீதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் காணப்படும் வியாபார நடவடிக்கைகள் காணப்படுகிறது எனப் பலதரப்பினர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில்
கரைச்சி பிரதேச சபை குறித்த 87 வியாபாரிகளுக்கும் 2016-05-04, 2016-12-24, மற்றும் 2017-07-30 அன்று கலந்துரையாடலின் தீர்மானத்திற்கு அமைவாகவும் தற்போது இறுதி அறிவித்தல் விடப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலுக்கு அமைய கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வீதிக்குரிய பகுதியில் வியாபார நிலையங்களை அமைத்து நடவடிக்கைகளில் ஈடுப்படும் வியாபாரிகள் அதனை அகற்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் தவறும் பட்சத்தில் சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் எனவும் கரைச்சி பிரதேச சபை தனது இறுதி அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.