204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்காது 2020ஆம் ஆண்டுக்குள் தீர்வினைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரவித்துள்ளார்.
யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடகிழக்கில் தமிழீழம் கோரி, எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து, அந்த போராட்டம் தோற்கடிப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.
போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளார்.
தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் ஆயுதங்களை தந்தால், பழைய யுத்த நிலைக்கு வரமாட்டோம். எத்தனை பிறவி எடுத்தாலும், அதை மீண்டும் செய்ய முடியாது. அது பொய்யான கூற்று. சிலருக்கு சில ஆசைகள் இருக்கின்றன. அதற்காக சில கட்சிகளை உடைத்து விடுகின்றார்கள். அதற்கு இடமளிக்காது. இன்று உள்ள தலைவர்கள் இனவாதம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். நாளை அமையப் போகும் தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், இனவாதிகளாகவே இருப்பார்கள். இனவாதிகளுடன் பேச முடியாத காரணத்தினால், இங்குள்ள சிறு சிறு கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கவும் கூடாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மதிக்கத்தக்கவராக இருக்கின்றார். ஆகையினால், சம்பந்தனின் ஊடாகவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வர முடியும்.
வடகிழக்கு இணைப்பையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீர்வு திட்டத்தில் முன்வைத்துள்ளார். இன்று வடகிழக்கு இணைப்பு ஏற்படக்கூடாதென்று, நாங்கள் எங்களுக்குள் அடிபடும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். அதற்கு இடமளிக்காது. எமது சிறு சிறு கட்சிகள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தன் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து நடப்பது போன்று, சிறு சிறு கட்சிகள் விட்டுக்கொடுத்து, இவற்றின் ஊடாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
சிறு சிறு கட்சிகளாக 12 உருவாகினால், வேறு கட்சிகள் இங்கு தமது கட்சிகளை நிலை நிறுத்தக்கூடும். அதற்கு இடமளிக்காது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன், பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Spread the love
1 comment
தலைவர் பிரபாகரனுக்கு நிகரானவரா சம்பந்தன், தமிழனின் மானத்தை காப்பாற்றியவன் பிரபாகரன் , தமிழினனின் மானத்தை கூறு போட்டு விற்பவன் சம்பந்தன் , வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரரும் மானம் காத்தோரும் தான் இருக்கமுடியும் , தன்னினத்தை காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களுக்கெல்லாம் அந்த புகழ் கிடையாது . ராஜன்.