குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.கொக்குவில் தொழினுட்பக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பில் காயமடைந்த மாணவர்களில் ஒருவரான தோம்ஷன் தெரிவிக்கையில் ,
தொழிநூட்பக்கல்லூரியில் நேற்றைய தினம் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வு முடிவடைந்து வெளியில் வந்த வேளை எமது கற்கை நெறியை சேர்ந்த மாணவன் ஒருவருக்கு பிறிதொரு கற்கை நெறி மாணவன் தலைகவசத்தினால் தாக்கினார்.
அதனை நாம் தடுத்து தாக்கிய மாணவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தோம். சிறிது நேரத்தில் அந்த மாணவன் மேலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனது கற்கை நெறி மாணவர்களை அழைத்து வந்து எமது கற்கை நெறி மாணவர்கள் மீது தலைக்கவசம் தடிகள் கம்பிகள் உள்ளிட்டவைகளால், எம் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்.
அதனை அடுத்து அங்கு வந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஏனைய மாணவர்கள் தாக்கிய மாணவர்களை மேலும் தாக்காது தடுத்தனர். அதனை அடுத்து தாக்கியவர்கள் நீங்கள் வெளியில் வாங்கோ வெட்டுறோம் என மிரட்டி தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தினை விட்டு வெளியேறினார்கள்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் எமது கற்கை நெறியை சேர்ந்த துஷாந் எனும் மாணவன் தலைக்கவசத்தால் மிக மோசமாக தக்கப்பட்டமையால் படுகாயமடைந்துள்ளான். அத்துடன் மேலும் 10 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் மற்றும் எங்களின் கற்கை நெறி மாணவர்கள் பயம் காரணமாக விரிவுரையாளர்களின் பாதுகாப்பு உடனையே தொழிநுட்பக்கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேறி வந்தோம்.
காயமடைந்த மாணவர்களில் 4 பேர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோம். என தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் புதன் கிழமை தமக்கு பரீட்சை முன்னோடி விரிவுரைகள் நடைபெற உள்ளதாவும், அதற்கு செல்வதற்கு தமது கற்கை நெறி மாணவர்கள் பயந்துடன் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.