7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்குமாறு சோனியாவுக்கு நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழரையும் கருணை அடிப்படையில் விடுவிக்க உதவ கோரி காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தோமஸ் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ராஜீவ் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு 2000-ஆம் ஆண்டிலும், மற்ற 3 பேருக்கும் கடந்த 2014- ஆம் ஆண்டிலும் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2014-ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில தாக்கல் செய்த மனு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் நீதிபதி தோமஸ் கடந்த ஒக்டோபர் 18-ஆம் திகதி சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் குற்றவாளிகள் 7 பேரும் சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
காந்தியடிகளை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்ற வழக்கில் அவரது சகோதரர் கோபால் கோட்சேவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும் நேரு தலைமையிலான மத்திய அரசு கோபால் கோட்சேவை விடுவித்தமையையும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.