இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாகப் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லி புகை மண்டலமாக காணப்படுவதால் பாடசாலைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சூழலில் காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) ) 100 இருந்தாலே அது உடல் நலத்துக்கு கேடு என்று கூறப்படுகின்ற நிலையில் தற்போது புதுடெல்லியின் தரக் குறியீடு 500ஆக காணப்படுவதாகவும் . இது மிகப் பெரிய சுகாதாரக் கேடு என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்று நிலை, குழந்தைகள்,வயதானவர்கள்,ஆஸ்துமா தொல்லை உள்ளவர்கள் போன்றோரின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. இதன் காரணமாகவே இந்திய மருத்துவ சங்கம் டெல்லியில் சுகாதார அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியிருந்தது. முச்சுக் கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
பஞ்சாப்,ஹரியாணா, டெல்லி, உ.பி. என வட மாநிலங்கள் அனைத்தும் காற்று மாசு காரணமாக மூச்சுத் திணறி வருகின்றன.
இதற்கு அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள், அடுப்புக் கரி என பல காரணங்கள் இருந்தாலும், குறிப்பாக அறுவடை முடிந்தபின் வைக்கோல்களை எரிப்பதுதான் முக்கிய காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 28 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுவது வழக்கமானது. இந்த நெல் அறுவடை முடிந்ததும்இ கோதுமை பயிரிடும் நடவடிக்கை தொடங்கப்படும். இதன் காரணமாக வைக்கோலுக்கு தீவைக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவததன் காரணமாகவே டெல்லியை பனிப்புகை சூழ்ந்துள்ளது. மொத்தம் 40 ஆயிரத்து 510 தீவைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை வைக்கோலை எரிப்பவர்களுக்கு 2500 ரூபா முதல் 15 ஆயிரம் ரூபாவரை தண்டப்பணம் அறவிடப்படும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் வைக்கோல் எரிக்கும் சம்வபங்கள் குறைவடையவில்லை என்றும் கூறப்படுகின்றது.