யாழ்., வலிகாமம் பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட ஆவா குழுவைத் தொடர்ந்து, வடமராட்சிப் பகுதியில் தாரா குழு என்ற குழு பிரபல்யமடையத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சிப் பகுதியில் நடந்தேறிய பல பாரிய கொள்ளைகள் மற்றும் தங்கச் சங்கிலி அறுப்பு போன்ற குற்றச்செயல்களுடன், இந்தக் குழுவுக்கு தொடர்பிருப்பதாக, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதற்கமைய, பருத்தித்துறை – கொட்டடி மற்றும் வளலாய் – அன்டனிபுரம் ஆகிய பகுதிகளை மையமாக வைத்து, இந்தக் கும்பல் செயற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது
உடுப்பிட்டிப் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவமொன்றையடுத்தே, இக்குழுவை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளதையடுத்து, இக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கைதாகியுள்ளார்.
மேலும் இக்கொள்ளைகள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட காவல்துறை குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே, தாரா குழு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இக்குழுவின் முக்கிய சந்தேகநபரொருவர் கைதாகி, பருத்தித்துறை நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்டதனைத் தொடர்ந்து, ஏனையவர்களும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.