குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலி ஜிந்தோட்ட வன்முறை சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு அங்குள்ள மதகுரு ஒருவரும் மதஸ்தலம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த மதகுருவால் வெளிமாவட்டங்களிலுள்ள ஆட்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததாக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்துள்ளார். காலி ஜிந்தோட்ட பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை நேரில் பார்வையிட்ட பின்னர் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
காலி, ஜிந்தோட்ட பகுதியிலே நேற்று மாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கே தற்போதைய சூழ்நிலையைப் பார்வையிடுவதற்காக இரவு 1 மணியளவில் சென்ற போது பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு – காலி வீதியூடாக உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை. அதையும் மீறி உள்ளே சென்று அங்கு பாதிக்கப்பட்டிருந்த மக்களையும், வன்முறையாளர்களால் சேதமாக்கப்பட வாகனங்கள், கடைகள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டோம்.
ஜிந்தோட்டை விதானகொட, குருந்துவத்த, மகாசபுகல, எலபட, எம்பிட்டிய போன்ற பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையை காணக் கூடியதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அங்குள்ள மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர். இந்த நாசகார செயல்கள் திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு அங்குள்ள மதகுரு ஒருவரும் மதஸ்தலம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த மதகுருவால் வெளிமாவட்டங்களிலுள்ள ஆட்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
தற்போது, இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதன் போது அமைச்சர் பைசர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பௌசுல் நியாஸ் ஆகியோரும் அங்கு வருகை தந்திருந்தனர். என தெரிவித்தார்.