குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலி ஜிந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு விபத்து சம்பவம் ஒன்றே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் முஸ்லீம் சிறுமி ஒருவர் உயிரிழந்து உள்ளார். குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதி சிங்களவராக இருந்தமையினால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
விபத்து சம்பவத்தினை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் சாரதியை கைது செய்திருந்தனர். பின்னர் சாரதி விடுவிக்கப்பட்டார். அதனால் மேலும் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறை விசேட அதிரடிப்டையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். அத்துடன் சுற்றுக்காவல் கடமைகளிலும் ஈடுபட்டனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காவல் கடமையில் ஈடுபட்டு இருந்த காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து விலக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடங்களில் இருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்ட சிங்கள இளைஞர்கள் இரவு முஸ்லீம் மக்கள் , அவர்களின் வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபட தொடங்கினார்கள். அத்துடன் கடைகளை சூறையாடியும் , உடமைகளை தீக்கிரை ஆக்கினார்கள்.
குறித்த தாக்குதல் சம்பவங்களினால் முஸ்லீம் மக்கள் காயமடைந்தனர். அதனால் இன முறுகல் ஏற்பட்டு சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.
அதனை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டது. குறுந்துவத்தை , மஹ ஹபுகல , வெளிப்பிட்டி மோதர, உக்வத்தை , ஹிந்தொட்ட மற்றும் பியன்டிகம கிராம சேவையாளர் பிரிவு பகுதிகளில் காவல்துறையினரினால் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரபட்டது.