இந்தியாவில் இருந்து மருத்துவ கழிவுகள், கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட கழிவு பொருட்கள் யாழ்.தொண்டமனாறு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்குகின்றன.
யாழ். வடமராட்சி , தொண்டமனாறு மற்றும் அக்கரை கடற்கரை பகுதிகளில் கழிவு பொருட்கள் கடந்த புதன் கிழமை முதல் கரையொதுங்கி வருகின்றன. அவை இந்தியாவில் இருந்தே கரையொதுங்குகின்றது என தெரிவிக்கபப்டுகின்றது.
மருத்துவகழிவுகள், காலாவதியான மருந்து பொருட்கள் , மாத்திரைகள் , கண்ணாடி (மருந்து) போத்தல்கள் , மருந்து ஊசிகள் , உள்ளிட்டவையுடன் , அழகு சாதன கிறீம் போத்தல்கள் மற்றும் டியூப் வகைகள் , மதுபான போத்தல்கள் , லைட்டர்கள் , சுவையூட்டப்பட பாக்கு வகைகள் என பல தரப்பட்ட கழிவு பொருட்கள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையொதுங்குகின்றன.
அது தொடர்பில் மீனவர் ஒருவர் தெரிவிக்கையில் , இந்த கழிவு பொருட்கள் திடீரென செவ்வாய்க்கிழமை முதல் கரையொதுங்கு கின்றன. இவை இந்தியாவில் கடலில் கொட்டப்பட்ட கழிவுகளாக இருக்கலாம்.
யாழில்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெய்த மழை காரணமாகவும் காற்றின் திசை காரணமாகவும் இவை இலங்கை கடற்பரப்பை நோக்கி வந்து கரையொதுங்கி இருக்கலாம். மீண்டும் காற்று திசை மாறும் போது மேலும் கழிவுகள் கரையொதுங்க சந்தர்ப்பம் உண்டு.
இந்த கழிவு பொருட்களில் உள்ள சில மாதிரிகளை வைத்து பார்க்கும் போது இவை கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கடலில் கொட்டப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றோம். அத்துடன் இந்த கழிவு பொருட்கள் மீன் பிடிவலைகளிலும் அகப்பட்டு உள்ளன
கடந்த புதன்கிழமை பெருமளவான கழிவு பொருட்கள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கரையொதுங்கி இருந்தன. அது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபைக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து கழிவு பொருட்களை பார்வையிட்ட பின்னர் அவற்றை கடற்கரையில் இருந்து உழவு இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினார்கள் என தெரிவித்தார். அது தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபை க்கு உட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சகிதன் தெரிவிக்கையில் , கடற்கரையில் இந்தியாவில் இருந்து கொட்டப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்கி உள்ளதாக தகவல்கள் வந்தன. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று இருந்தோம். மருந்து போத்தல்கள் உட்பட மதுபான போத்தல்கள், லைட்டர்கள் , என பல பொருட்கள் கரை ஒதுங்கி இருந்தன. அவற்றை நகர சபை ஊழியர்கள் மூலம் கடற்கரையில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளோம். என தெரிவித்தார். அதேவேளை கழிவு பொருட்களை தமிழக அரசு படகுகள் மூலம் நடுக்கடலுக்கு கொண்டு வந்து கடலினுள் கொட்டுகின்றார்களா ? எனும் சந்தேகமும் மீனவர்கள் மத்தியில் உள்ளது.
கழிவு பொருட்கள் கரையொதுங்குவது தொடர்பில் அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும். இந்திய தமிழக அரசால் கடலினுள் கழிவு பொருட்கள் கொட்டப்படுகின்றனவா ?என மீனவர்கள் மத்தியில் உள்ள சந்தேகத்தை நீக்கும் விதமாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
கடலினுள் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட கழிவு பொருட்களை கொட்டுவதனால் கடல் வளங்கள் பாதிப்படைந்து , மீன் இனங்கள் அழிவடைவது மாத்திரமின்றி சுற்று சூழலுக்கும் சவால் விடும் அளவில் பாதிப்புக்கள் ஏற்படலாம்.
இவை தொடர்பில் உரிய அதிகாரிகள் கரிசனை கொண்டு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களா ? அல்லது கழிவு பொருட்கள் கரை ஒதுங்க விட்டு அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை மாத்திரம் செய்ய போகின்றார்களா ?