குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்ந்த குடும்பத்தலைவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். வடமராட்சிப் பகுதியில் 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 வயதுடைய சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில் அந்தச் சிறுமி ஒரு பிள்ளையின் தாயாரானார்.
இது தொடர்பில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அயல் வீட்டில் வசித்த 6 பிள்ளைகளின் தந்தை (வயது- 42 ) கைது செய்யப்பட்டார். சிறுமியை சட்டரீதியான பாதுகாவலர்களிடமிருந்து கடத்திச் சென்று வற்புணர்ந்த உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகள் எதிரி மீது சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையிலேயே இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பினை வழங்கினார்.
தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுகையில் ,
‘எதிரி மீதான 3 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு அவரைக் குற்றவாளியாக மன்று உறுதிசெய்கிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் 15 ஆண்டுகள் வீதம் 45 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. மூன்று சிறைத் தண்டனையையும் குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க முடியும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவளது குழந்தைக்குமாக 6 இலட்சம் ரூபா இழப்பீட்டை வழங்கவேண்டும். அதனை செலுத்தத் தவறின் ஓர் ஆண்டு சிறைத் தண்டணையை அனுபவிக்கவேண்டும்.
தண்டப் பணமாக 6 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டும். தண்டம் செலுத்தத் தவறின் 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும்’ என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தண்டனைத் தீர்ப்பை அறிவித்தார்.