147
இந்தியாவின் தமிழக மாநிலத்தில் கந்துவட்டி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வோரின் எணிக்கை அதிகரித்துள்ளது. இந்திய அளவிலும் கந்துவட்டி கடன் தற்கொலைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த சில நாட்களின் முன்னர் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து (28). இவரது மனைவி (25), மகள்கள் மதி (5) அட்சயா (1) ஆகிய ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தனர்.
குறித்த தீக்குளிப்பு சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் தமிழக இந்திய அரசுகள் மீது பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் தமிழ் திரைத்துறையிலும் கந்துவெட்டியால் தற்கொலை மரணம் இடம்பெற்றமை அண்மைய அதிர்ச்சியாகும்.
இயக்குநர், நடிகர் சசிகுமாரின் உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வால் மீண்டும் தமிழக அரசுமீது கட்டனங்கள் எழுந்துள்ளன. 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 18% மேல் வட்டி வசூலித்தால் 3 ஆண்டு சிறை, ரூ. 30 ஆயிரம் தண்டப்பணம் செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் நாள் வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் வசூல் முதலியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் அது நடைமுறைப்படுத்தப்படாமையே தொடர் மரணங்களுக்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கந்துவட்டி தொழிலை குண்டர் சட்டத்தின் கீழ் கொண்டுவரவேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. இணை தயாரிப்பாளர் அசோக் குமார் மரணத்துடன் கந்துவட்டி தொல்லை முடிவுறுமா? என்பதே தமிழகத்தில் இன்று பெரும் கேள்வியாக உள்ளது.
Spread the love