குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
மருமகனை கத்தியால் குத்தி படுகொலை செய்த மாமனாருக்கு 7ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கியும் 10 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் விதித்தும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
யாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தங்கராஜா சரத்பாபு எனும் நபர் தாக்கபட்டு பின்னர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தந்தை , சகோதரன் மற்றுமொரு நபர் என மூவர் யாழ்.பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து மூவரையும் எதிரியாக கண்ட சட்டமா அதிபர் திணைக்களம் மூவருக்கும் எதிராக யாழ்.மேல் நீதிமன்றில் குற்றபகிர்வு பத்திரத்தினை தாக்கல் செய்தனர்.
யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக நடைபெற்ற வழக்கு விசாரனைகளை வழக்கு தொடுனர் தரப்பில் வழக்கினை அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் நெறிப்படுத்தினார். எதிரி தரப்பு சட்டத்தரணி வி.திருக்குமரன் முன்னிலையானர்.
எதிரி தரப்பு சட்டத்தரணி தனது தொகுப்புரையில் ,
கொலை செய்யப்பட்டவர் அவரது மனைவியை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவ தினத்தன்றும் தனது மனைவியை மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மனைவி காயமடைந்ததை அடுத்து தனது தந்தைக்கும் சகோதரனுக்கு தொலைபேசி ஊடாக தன் மீதான தாக்குதல் தொடர்பில் தெரியப்படுத்தி உள்ளார். அதனை அடுத்து அங்கு சென்ற மனைவின் தந்தை, சகோதரனுடன் மற்றுமொரு நபரும் சென்றுள்ளனர்.
அங்கு சென்றவர்களில் வழக்கின் இரண்டாவது எதிரியாக குறிப்பிடப்பட்டு உள்ள கொலையுண்டவரின் மனைவியின் சகோதரன் காயமடைந்த தனது சகோதரியை வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன் பின்னர் முதலாம் எதிரியாக குறிப்பிடப்பட்டு உள்ள கொலையுண்டவரின் மனைவியின் தந்தை மருமகனுடன் பேசியுள்ளார். அதன் போது இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு அது கைக்கலப்பாக மாறியதால் முதலாம் எதிரி அவரை கத்தியால் குத்தியதில் அவர் மரணமடைந்தார். என சட்டத்தரணி தெரிவித்திருந்தார்.
இரு தரப்பு தொகுப்புரையையும் ஆராய்ந்த நீதிபதி நேற்றைய தினம் புதன்கிழமை தீர்ப்பளிக்கையில் ,
இந்த வழக்கில் முதலாம் எதிரி சம்பவ நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் , அதானல் ஏற்பட்ட ஆத்திரத்தில் கத்தியால் குத்தியதில் அவரது மருமகன் (மகளின் கணவன்) இறந்துள்ளார். அதனை கைமோச கொலையாக மன்று காண்கின்றது. அதன் அடிப்படையில் அக்குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. அத்துடன் 10ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த வேண்டும். அதனை செலுத்த தவறின் 3ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இரண்டாம் எதிரி தனது மச்சானான (சகோதரியின் கணவன்) இறந்தவரை முதலில் தாக்கியுள்ளார். அக்குற்றத்திற்கு 02 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது. அதனை 05 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படுகின்றது. மற்றும் 10ஆயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்த வேண்டும்.
மூன்றாம் எதிரியை மன்று நிரபராதியாக கண்டு அவரை முற்றாக விடுதலை செய்கிறது என நீதிபதி தீர்ப்பளித்தார்.