ஊழல் மோசடிக்கு எதிராக தீர்மானங்களை மேற்கொள்கின்றபோது அதற்கெதிராக தன்மீது குற்றம் சுமத்தப்படுமானால் தனது பதவிகளை துறந்து மக்களுடன் இணைந்து அப்போராட்டத்தை முன்கொண்டு செல்ல தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (24) நிக்கவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கம் தவறிழைத்த காரணத்தினால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். ஐக்கிய தேசிய கட்சியிலுள்ளவர்களும் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அந்த தவறுகளை செய்வார்களானால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏற்கனவே இருந்த ஊழல் ஆட்சியை மாற்றி மக்கள் புதிய அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தமை சரியான ஆட்சியை முன்னெடுப்பதற்காகவே ஆகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக சரியான திசையில் பயணிக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.